ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களை தடை செய்வதற்கான சட்டம் இயற்ற எவ்வளவு காலம் தேவை? - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் சட்டம் இயற்றுவதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும்? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
ஆன்லைன் ரம்மியை தடை செய்யக் கோரிய மனுக்கள், நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தன. ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அதை முதலமைச்சரே தெரிவித்திருப்பதாகவும் அரசுத்தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
அரசு அதிக முக்கியத்துவத்துடன் இந்த விவகாரத்தை கையாள்கிறது என்றும், சட்ட வரைவு தயாரிக்கப்பட உள்ளது என்றும் கூறிய அரசுத் தரப்பு, சட்டமன்றத்தை கூட்டியே மசோதாவை நிறைவேற்ற முடியும் என்பதையும் சுட்டிக்காட்டியது.
தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் இல்லை என்பதால், அதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கவில்லை எனவும் விளக்கமளிக்கப்பட்டது.
சினிமா நடிகர்களை அப்படியே பின்பற்றும் நிலை தமிழகத்தில் அதிகம் உள்ளது என்று கூறிய நீதிபதிகள், பிரபலமானவர்கள் பலர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு விளம்பரம் செய்வதையும் குறிப்பிட்டனர்.
நாள்தோறும் உயிர்கள் பலியாகும் நிலையில், விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்வதற்கு, அது தொடர்பான சட்டம் இயற்றுவதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும்? சட்டமாக இயற்றப்பட உள்ளதா? விதியாக அமல்படுத்தப்படுமா? என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது? என்பது குறித்து அரசுத்தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டனர்.
Comments