இந்த நாள் வாழ்வில் மகிழ்ச்சியான நாள்: முதலமைச்சர் நெகிழ்ச்சி

0 2200
நீட் தேர்வுக்கான எதிர்ப்பு தொடரும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மருத்துவப் படிப்பில் 7 புள்ளி 5 சதவீத உள்ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த நாள், தன்னுடைய வாழ்வில் மகிழ்ச்சியான நாள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருக்கமாகக் குறிப்பிட்டார். அவரிடமிருந்து எம்பிபிஎஸ் அட்மிஷனை பெற்ற அரசுப் பள்ளி மாணாக்கர்களும், பெற்றோர்களும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளுகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் தொடங்கியது. முதலில், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. முதல் நாளில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவ-மாணவிகள் 267 பேர் அழைக்கப்பட்டனர். இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகள், அரசு சென்னை மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்தனர்.

7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுப் பிரிவின் கீழ், மருத்துவ இடங்களை பெற்ற முதல் 18 மாணவ-மாணவிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேர்க்கை ஆணை வழங்கினார். ஒரு மாணவருக்கு மருத்துவருக்கான அங்கி, ஸ்டெத்தாஸ்கோப்பை முதலமைச்சர் வழங்கினார்.

மருத்துவப் படிப்பு கனவை நனவாக்கியதற்காக நன்றி தெரிவித்த மாணாக்கர்களும், பெற்றோர்களும் உணர்ச்சிப் பெருக்குடன் காணப்பட்டனர்.

ஒரு மாணவியின் தந்தை கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தபோது, அனைவரது கண்களும் கலங்கின. பின்னர் இருவரும் முதலமைச்சரின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வரலாற்றில் இந்த நாள் ஒரு பொன்னாள் என்றும், அரசுப்பள்ளியில் படித்தவன் என்கிற முறையில் தனக்கு மகிழ்ச்சிகரமான நாள், மனநிறைவை ஏற்படுத்திய நாள் என்றும் குறிப்பிட்டார். அரசுப்பள்ளிகளில் பயின்ற 6 பேர் மட்டுமே சென்ற ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தனர் என்றும், தமிழக அரசின் சட்டத்தால் 404 பேர் சேரும் நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் கூறினார்.

மருத்துவப் படிப்புக்கு அட்மிஷன் பெற்ற மாணவ-மாணவிகள், அரசுப் பள்ளிகளில் பயின்ற தங்களுக்கு உள்ஒதுக்கீடு சட்டத்தின் மூலம் வாய்ப்பை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments