தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: நிரம்பி வரும் அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகள்

0 4018
தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: நிரம்பி வரும் அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகள்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வெகுவாக நிரம்பி வருகின்றன.  

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக, தேனி பெரியகுளம் வராக நதிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், வடுகபட்டி, மேல்மங்களம்,ஜெயமங்களம், குள்ளப்புரம் ஆகிய கிராம மக்கள் ஆற்றில் இறங்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கடனாநதி தனது முழு கொள்ளளவான 85 அடியை எட்டியது. இதன் மூலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 82 குளங்களும் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடனாநதி அணை 11 கிராமங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. தற்போதைய நிலவரப்படி, அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 800 கன அடி வீதமாகவும், வெளியேற்றம் 800 கனஅடி வீதமாகவும் உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, ஒரே இரவில் பிளவக்கல் பெரியாறு அணை நீர்மட்டம் 7 அடி உயர்ந்துள்ளது. 47 அடி முழு கொள்ளளவு கொண்ட பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே இரவில் 29 அடியியிலிருந்து 36 அடியாக உயந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 400 கனஅடி வீதமாக உள்ள நிலையில், 100 கன அடி வீதம் தண்ணீர் பாசனத்திற்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3-வது நாளாக பரவலாக மழை பெய்து வருவதால், அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 48 அடி முழு கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 43.58 அடியாக உயர்ந்துள்ளது. 77 அடி முழு கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 69.55 அடியை தொட்டுள்ளது. அதே போல சிற்றார் 1, சிற்றார் 2 உட்பட முக்கிய அணைகளின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்து வருகிறது. 

தொடர் மழையால் நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 143 அடி மொத்த உயரம் கொண்ட பாபநாசம் அணையில் 117 புள்ளி 20 அடிக்கு நீர் நிரம்பியுள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,813 கன அடி வீதமாகவும், வெளியேற்றம் 359 கனஅடி  வீதமாகவும் உள்ளது. நீர்வரத்தை விட வெளியேற்றம் மிக மிக குறைவாக உள்ளதால், நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. அதேபோன்று 156 அடி மொத்த உயரம் கொண்ட சேர்வலாறு அணையிலும் 135 புள்ளி 69 அடிக்கு நீர் நிரம்பியுள்ளது.

தொடர் மழை காரணமாக, தேனி மாவட்டம் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வைகை அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. மேலும், சுருளி அருவி, போடி கொட்டகுடி ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கொட்டகுடி ஆற்றில் மூன்று கண் மதகுகள் வழியாக ஏரி, குளங்களுக்கு திருப்பிவிடப்பட்ட நீர் போக உபரி நீர் வைகை அணையில் திறந்துவிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் கடையம் இராமநதி அணை நடப்பாண்டில் 4வது முறையாக தனது முழு கொள்ளளவான 84 அடியை எட்டியது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 250 கன அடி வீதமாக உள்ள நிலையில், வடகால் பாசனம் வழியாக 50 கனஅடி நீரும், தென்கால் பாசனம் வழியாக 50கனஅடி நீரும், அணையின் முக்கிய பெரிய மதகு வழியாக 150கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments