லடாக்கில் சீனா மின்காந்த அலைகளைப் பயன்படுத்தியதால் இந்திய வீரர்கள் நிலைகுலைந்து போனதாக தகவல்... இந்திய ராணுவம் மறுப்பு
லடாக் எல்லையில் ரகசிய மின்காந்த அலைகள் மூலம் சீனா தாக்குதல் நடத்தியதாகவும், அதனால் இந்திய வீரர்கள் நிலைகுலைந்து போனதாகவும் சீனப் பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ள நிலையில், அதற்கு இந்திய ராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
லடாக் எல்லையில் இந்தியா-சீன வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பதற்றநிலை தணிந்து வருகிறது.
இந்நிலையில், பெய்ஜிங்கில் நடந்த மாணவர்கள் மாநாட்டில் பேசிய சர்வதேச ஆய்வு நிபுணர் ஜின் கேன்ராங், லடாக் எல்லையில் இந்திய வீரர்களை பின்வாங்கச் செய்ய சீனா மின்காந்த அலைகளை ஆயுதமாக உபயோகித்ததாகக் கூறினார்.
பழைய ஒப்பந்தப்படி இரு நாட்டு வீரர்களும் லடாக்கில் துப்பாக்கி பயன்படுத்த தடை உள்ளதால் சீனா ரகசியமாக இந்த ஆயுதத்தைப் பிரயோகித்ததாகக் குறிப்பிட்டார்.
இந்த மின்காந்த அலைகள் மனித சதையை ஊடுருவி நீர்ச்சத்தை குறைக்கும் தன்மை கொண்டது என்று பேசிய அவர், வலியே இல்லாமல் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனால் இந்திய வீரர்களுக்கு உடல் வெப்பநிலையில் மாற்றம், வாந்தி, உடல் சோர்வு போன்றவை ஏற்பட்டதாகத் தெரிவித்த ஜின் கேன்ரங், இந்த நுண்ணலை ஆயுதத்தை சீனா தற்போதுதான் முதன்முறையாகப் பயன்படுத்தியதாகவும் பேசியுள்ளார்.
இதனை கடுமையாக மறுத்துள்ள இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர், இது ஒரு போலியான, நகைச்சுவையான கூற்று என்றும், எல்லையைத் தாண்டி தொடரும் உளவியல் நடவடிக்கைகளின் ஒரு பகுதி என்றும் தெரிவித்துள்ளார்.
மனித உடல் சாதாரணமாக 98 பாரன்ஹீட் வெப்பநிலையில் இருக்கும் நிலையில் சீனா பயன்படுத்தியதாகக் கூறப்படும் மின்காந்த அலைகள் மனித உடலின் வெப்பநிலையை 130 பாரன்ஹீட் அளவிற்கு உயர்த்துவதால் உடலில் நீர்ச்சத்து வற்றிப்போகும் அபாயம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவிடமும் இதுபோன்ற ஆயுதங்கள் இருக்கும் நிலையில் நுண்காந்த அலைகளை சீனா பயன்படுத்திருப்பது முதன்முறையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Comments