அரசு பேருந்துக்குள் மழை குடைபிடித்த ஓட்டுனர்..! ஓட்டை பேருந்துகளால் பயணிகள் அவதி

0 7633
அரசு பேருந்துக்குள் மழை குடைபிடித்த ஓட்டுனர்..! ஓட்டை பேருந்துகளால் பயணிகள் அவதி

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே அரசு மேற்கூரை சேதமடைந்த பேருந்துக்குள் கனமழை கொட்டியதால் ஓட்டுனர், குடை பிடித்துக் கொண்டே ஒற்றைக் கையால் பேருந்தை ஓட்டிச்செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்ட காட்சிகள் வெளியாகி உள்ளது.

மழைக்காக அரசு பேருந்தில் ஏறினால் பேருந்துக்குள் மழைபெய்யும் இந்த அதிசய பேருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியில் இருந்து ஒட்டப்பிடாரத்தை அடுத்த கப்பிகுளத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது.

கப்பிகுளம் எப்போதும்வென்றான் வெங்கடாசலபுரம் பகுதியில் பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து புறப்பட்டபோது திடீரென கொட்டித்தீர்த்த கனமழை யால் ஓட்டை உடைசலான பேருந்தின் மேற் கூரையில் இருந்து பேருந்து முழுவதும் ஆங்காங்கே மழை நீர் ஒழுகத் தொடங்கியது.

TN 721491 என்ற இந்த ஓட்டை பேருந்து மிகவும் பழுதடைந்த காரணத்தினால் மாற்று பேருந்து தரவேண்டும் என்றும் அல்லது சீரமைத்து தரவேண்டும் என்றும் பலமுறை மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால் அரசு போக்குவரத்து கழகத்தினர் மக்களின் கோரிக்கையை ஏற்று இந்த வழித்தடத்தில் உருப்படியான பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்காததன் விளைவு மேற்கூரை சேதமடைந்த இந்த பேருந்திற்குள் ஓட்டுனரே குடை பிடித்தபடி ஒற்றைக்கையில் ஆபத்தான வகையில் பேருந்தை ஓட்டிச்செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர் அப்பகுதி மக்கள்.

ஜன்னல் கண்ணாடிகள் அனைத்தும் பழுதாகி, அவசரத்திற்கு இழுத்து மூட இயலாத வகையில் இருப்பதால் பயணிகள் இருக்கையில் மழை நீர் கொட்டி பயணிகள் அமர இயலாத நிலை ஏற்பட்டது.

பேருந்துக்குள் சில பயணிகள் குடை பிடித்தபடியேயும், காலியான இருக்கைகள் இருந்தும் அமர இயலாமல் நின்று கொண்டும் பயணித்தனர். இது போன்ற ஓட்டை உடைசலான பேருந்துகளை குடை பிடித்தபடி இயக்குவதை ஓட்டுனர்கள் தவிர்க்க வேண்டும் என்று கூறும் சமூக ஆர்வலர்கள் இது பயணிகளின் உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதை உணர்ந்து சம்பந்தப்பட்ட டெப்போ அதிகாரிகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுப்பேருந்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். 

அதே நேரத்தில் நகர்புற பகுதியை போல கிராமப்புறங்களுக்கும் புதிய பேருந்துகளை வழங்கி அப்பகுதி மக்களின் ஏக்கத்தை போக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments