தொடரும் பலத்த மழை... சென்னை புறநகரை சூழும் தண்ணீர்...

0 12400
தொடரும் பலத்த மழை... சென்னை புறநகரை சூழும் தண்ணீர்...

சென்னை புறநகரில் தொடரும் மழையால் பல இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சென்னையை சுற்றி உள்ள 14 ஏரிகள் நிரம்பி வழிவதால் அடையாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.

சென்னையை சுற்றி உள்ள தாம்பரம், முடிச்சூர், காட்டங்கொளத்தூர், குன்றத்தூர், மாங்காடு, ஆவடி, அம்பத்தூர் என பல ஊர்களில் இரவு முதல் மழை வெளுத்து வாங்கியது. இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் பகல் பொழுதிலேயே வானம் இருட்டியது. பகல் இரவு போல மாறியது.

இந்நிலையில், சென்னையை அடுத்து காட்டாங்குளத்தூர், செந்தமிழ் நகரில் கனமழை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. காவனூர் ஏரி அருகே இருக்கும் தாழ்வான அந்த பகுதியில் ஏற்பட்ட வெள்ளபெருக்கால், மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்த மழையால் சாலைகளில் பெருகி ஓடிய தண்ணீரால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.அங்குள்ள பூங்காவிலும் தண்ணீர் நிரம்பியது. மழை நீருடன் கழிவு நீரும் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்க செந்தமிழ் நகர் குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை புறநகர் பகுதியான இரையூர், செம்பாக்கம்,நத்தப்பேட்டை, வையூர்,புக்காத்துறை, கொளப்பாக்கம், தாத்தனூர், குண்டுபெரம்பேடு,அரனேரி, நன்மங்கலம், புலிக்கொரடு, எம்.என்.குப்பம், பட்டறைகழனி, வையூர் புல்லிட்டின் தாங்கல் ஆகிய 14 ஏரிகளும் தொடர் மழையால் நிரம்பி உள்ளன.

அந்த ஏரிகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் கலப்பதால் அடையாற்றிலும் நீர் வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னை நகரின் ஊடாக ஓடும் அடையாறில் நீர் வரத்து அதிகரித்து வருவதால், ஆற்றங்கரையோரத்தில் இருப்போர் பாதுகாப்பாக இருக்குமென அதிகாரிகள் கூறியுள்ளனர்.ல் அடையாறு கரையோரம் உள்ள வரதராஜபுரம், லக்ஷ்மி நகர், முடிச்சூர், பி டி சி கோட்ரஸ், மணிமங்கலம் போன்ற பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தாழ்வான இடங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே முடிச்சூர் அருகே அடையாற்றில் ஆகாய தாமரை படர்ந்து கிடப்பதால் நீரோட்டம் தடைபட்டு, அருகில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் செல்லும் நிலை உருவானது. இதையடுத்து தாம்பரம் தீயணைப்பு துறையினர் ஆகாயதாமரை செடிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள அம்மணம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வீடுகளில் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் ஏரி முழுவதும் நிரம்புமுன்னே ஆக்கிரமித்து வீடுகளை கட்டியவர்கள் மதகை உடைத்து நீரை வெளியேற்றுவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்துத் தகவல் அறிந்தும், குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அதிகாரி நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதேபோல் உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள நரியம்பாக்கம் ஏரி முழுவதும் நிரம்பி மதகில் உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறிச் செல்கிறது. உடைப்பை அடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் நான்கு ஏரிகளிலும் சேர்த்து மொத்தம் 6 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. புழல் ஏரியில் மட்டும் இரண்டாயிரத்து 367 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு 498 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சோழவரம் ஏரியில் மிகக் குறைந்த அளவாக 142 மில்லியன் கன அடி நீர் மட்டுமே உள்ளது. பூண்டி ஏரியில் அதன் முழுக்கொள்ளளவில் பாதியளவே தண்ணீர் உள்ளது. கிருஷ்ணா நீர், மழை நீர் என ஏரிக்கு ஆயிரத்து 150 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.

இதனிடையே சென்னையில் ஓடும் கூவம் ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடரும் மழையால் இருகரைகளையும் தொட்டுக் கொண்டு அந்த ஆற்றில் தண்ணீர் பெருகி ஓடுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments