விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்..!
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து அமெரிக்காவின் முழுமையான வணிக ரீதியான தனியார் விண்கலத்தை, நாசா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள 4 வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, சர்வதேச விண்வெளி மையத்திற்கு ரஷ்யாவின் சோயுஸ் ராக்கெட்டுகள் மூலம் வீரர்களை அனுப்பி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்கத் தொழிலதிபர் எலான் மஸ்க்-கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு மனிதர்களை அனுப்புகின்ற திட்டத்தின் படி, க்ரூ டிராகன் விண்கலத்துடன் கூடிய பால்கன் 9 ரக ராக்கெட்டை தயாரித்துள்ளது.
க்ரூ டிராகன் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு நாசா மற்றும் ஜப்பான் வீரர்கள் 4 பேர் இன்று அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர். புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, இந்திய நேரப்படி அதிகாலை 5.57 மணிக்கு, பால்கன் 9 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
தனியாருக்கு சொந்தமான விண்கலத்தில், முழுமையான விண்வெளி பயணத்தை நாசா மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும். விண்வெளியில் பாய்ந்த பிறகு இரண்டாவது கட்டமாக பால்கன் ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக பிரிந்த க்ரூ ட்ராகன் விண்கலம், இலக்கை நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளது.
27 மணி நேர பயணத்திற்கு பிறகு க்ரூ ட்ராகன் விண்கலம், நாளை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடையும். விண்வெளி வீரர்கள் 6 மாதம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் பணிகளை மேற்கொள்வார்கள்.
முழுவதும் ஆட்களை ஏற்றிச் செல்லும் இந்த விண்கலம், அளவில் அமெரிக்காவின் மிகப்பெரிய விண்கலம் என கூறப்படுகிறது.
பால்கன்-9 ராக்கெட் ஏவப்பட்டதை அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் நேரில் பார்வையிட்டார். அப்போது பேசிய அவர், அமெரிக்க விண்வெளி வீரர்கள் ரஷ்ய சோயுஸ் ராக்கெட்டுகளில் பறக்கலாம் எனவும், அதேபோன்று ரஷ்ய விண்வெளி வீரர்களும் வணிகக் குழு வாகனங்களில் பறக்கும் வாய்ப்பை பரிமாறிக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார். ரஷியாவிற்கு இதனால் எவ்வித இழப்பும் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அதிபர் பதவிக்கு தேர்வாகியுள்ள ஜோ பைடன் உள்ளிட்டோரும் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
Comments