ஓட்டு வீடாக மாறிய ஓலைக்குடிசை.. பள்ளிக் கால நண்பர்களின் தீபாவளிப் பரிசு..!
புதுக்கோட்டையில் கஜா புயலால் சிதிலமடைந்த குடிசை வீட்டில் 4 குழந்தைகளுடன் தவித்து வந்த லாரி ஓட்டுநருக்கு, புதிய வீடு ஒன்றை கட்டி தீபாவளி பரிசாகக் கொடுத்து நெகிழ வைத்துள்ளனர் அவரது பள்ளிக்கால நண்பர்கள்...
புதுக்கோட்டை மச்சுவாடி கொட்டகை கார தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார். மனைவி, இரு மகள்கள், இரு மகன்கள் என 6 பேர் அடங்கியது இவரது குடும்பம். லாரி ஓட்டுநரான முத்துக்குமாரின் குடிசை வீடு இரண்டாண்டுகளுக்கு முன் கஜா புயலில் சேதமடைந்து சின்னாபின்னமானது. வீட்டை சீர்படுத்த முடியாத நிலையில், அதன் மீது பேனர்கள், தார்பாய்களை விரித்து வசித்து வந்துள்ளார் முத்துக்குமார்.
இந்நிலையில், டி.இ.எல்.சி மேல்நிலைப்பள்ளியில் அவருடன் படித்த ஒருவர் முத்துக்குமாரின் குடும்ப நிலையை நேரில் கண்டு வேதனையடைந்து சக நண்பர்களுடன் வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்துள்ளார். அவர்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி, ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் வீடு ஒன்றைக் கட்டிக் கொடுத்து தீபாவளிப் பரிசாக வழங்கியுள்ளனர்.
கல்லூரியிலோ, பணியாற்றும் இடங்களிலோ கிடைக்கும் நண்பர்களைவிட, பள்ளிக்கால நட்புக்கென தனித்துவம் உண்டு என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறது இந்த சம்பவம்...
Comments