திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது

0 12510
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா, யாகசாலை பூஜையுடன் தொடங்கியுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா, யாகசாலை பூஜையுடன் தொடங்கியுள்ளது.

கோவிலில் இன்று அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் எழுந்தருள, 7 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

இன்று முதல் வரும் 19ஆம் தேதி வரை அதிகாலை 5 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரையும் நாள்தோறும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு வழிபாட்டுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் நடைபெறும் 20, 21ஆம் தேதிகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கடற்கரைக்குப் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை என்பதால், கோவிலிலிருந்து இறங்கும் பகுதியில் தகரத் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

முருகனின் 3ம் படை வீடான பழனி முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா, சண்முகர், நவ வீரர்கள் மற்றும் துவார பாலகருக்கு காப்பு கட்டும்  நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

கொரோனா காரணமாக பக்தர்களுக்கு பழனி கோயிலில் காப்பு கட்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வீடுகளிலேயே காப்புக் கட்டி கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளில் 6ம் படை வீடான மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்மலை மீதுள்ள பழமுதிர்சோலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது.

இதையொட்டி சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், தேன் இளநீர் உள்ளிட்ட பலவகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. பின்னர் அன்னவாகனத்தில் புறப்பாடு ஆகி சுவாமி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருநெல்வேலி - குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் காப்பு கட்டுதலுடன்கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது.

கோவில் நடை திறக்கப்பட்டதும் முதலில், விஸ்வரூபம் தரிசனமும் தொடர்ந்து யாக சாலை பூஜை யும் இடம் பெற்றது.

மூலவருக்கும் உற்சவருக்கும் பால் பன்னீர் சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, பின், உற்சவருக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் கொரோனா ஊரடங்கு காரணமாக கந்த சஷ்டி விழா மிகவும் எளிமையாக  கொண்டாடப்பட்டது .

வழக்கம் போல் இந்தாண்டும் முருக பக்தர்கள் காப்பு கட்டி, தங்கள் விரதத்தை துவக்கினர்.

நாகராஜகோயிலின் உள்ளே உள்ள முருகனின் மூலஸ்தானத்தில்  பால முருகன் கோவிலில் நடைபெற்ற கந்தசஸ்டி விழாவில், முருக பக்தர்கள் தனி நபர் இடைவெளி உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு வழிகாட்டி விதிமுறைகளை கடைபிடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments