தீபாவளித் திருநாள் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டம்
தீபாவளித் திருநாளையொட்டித் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் புத்தாடை அணிந்தும், கோவில்களுக்குச் சென்று வழிபட்டும் உறவினர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
நாடு முழுவதும் இன்று தீபாவளி மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் எண்ணெய் தேய்த்துக் குளித்தும், புத்தாடை அணிந்தும், கோவில்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டும், அறுசுவை உணவுகள், தின்பண்டங்கள் ஆகியவற்றை உறவினருக்கும் அண்டை வீட்டாருக்கும் வழங்கிப் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர். கொரோனா சூழலில் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் வீடுகளில் அடைபட்டிருந்த மக்கள் இந்தக் கொண்டாட்டத்தால் புத்துணர்வு பெற்றுள்ளனர்.
சென்னை ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, புரசைவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் குடும்பங்களுடன் பட்டாசுகள் வெடித்தும், மத்தாப்புகள் கொளுத்தியும் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினர். இதேபோல் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், வடபழனி முருகன் கோயில், தியாகராய நகர் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தீபாவளி பண்டிகை திருச்சி மாவட்டம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் காலை முதலே புத்தாடைகள் அணிந்தும், பட்டாசுகள் வெடித்தும், ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டும் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி நாமக்கலில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி அங்குள்ள 18 உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சிலைக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்டவற்றை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதணை காட்டப்பட்டது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சிறப்பு உற்சவம் நடைபெற்றது. இதனையொட்டி பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஏகம்பரநாதர் உடன் ஏலவார்குழலியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கொரோனா தொற்று காரணமாக குறைந்தளவு பக்தர்களே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
Comments