அலகே... அழகு...பச்சைக்கிளி...! வாழ்வளிக்கும் சென்னை தம்பதி..!
ஆயிரக்கணக்கான பச்சைக்கிளிகளுக்கு சென்னை தம்பதி, கடந்த 10 ஆண்டுகளாக நாள்தோறும் உணவு கொடுத்து, வாழ்வளித்து வருகிறார்கள்.
ஆச்சரியம் தரும் நிகழ்வு குறித்து விளக்குகிறது, இந்த சிறப்புச் செய்தித் தொகுப்பு.
நேர்த்தியாக அடுக்கி வைக்கப்படும் உணவுகள் ! - எங்கிருந்தாலும் உணவு தேடி வரும் பச்சைக் கிளிகள் ! என மொட்டை மாடி முழுவதும் பச்சை வண்ணமாக காட்சி அளிக்கிறது, சென்னை - சிந்தாதிரிப்பேட்டை சுதர்சன் ஷா - வித்யா தம்பதியின் இல்லம்.
ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு இந்த தம்பதி, உணவு கொடுத்து வாழ்வளிக்கிறார்கள். 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாயில்லா ஜீவன்களுக்கு உணவு அளித்து வருவதாக கூறும் சுதர்சன் ஷாவின் மனைவி வித்யா, இதனை தங்கள் குடும்பம் அதிர்ஷ்டமாக பார்ப்பதாக தெரிவித்தார்.
அதிகாலை 3 மணிக்கே மொட்டை மாடியில் உள்ள பலகை அடுக்குகளில் அரிசி மற்றும் வேர்க்கடலை தட்டுகளை இந்த தம்பதி அடுக்க, அருகில் உள்ள மரங்களில் காத்திருக்கின்றன பச்சைக்கிளிகள்.
சிறு வயது முதலே, பச்சைக்கிளிகள் மீது காதல் கொண்டிருந்ததாக கூறும் சுதர்சன் ஷா , வீதியில் நடமாடும் நாய்கள் முதல் மொட்டை மாடிக்கு தேடி வரும் பறவைகள் வரை, வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வளித்து வருகிறார்.
சென்னை - மண்ணடி அருகே எலக்டிரிக்கல் கடை நடத்தி வரும் சுதர்சன் ஷா, தமது வருமானத்தில் 50 சதவீதத்தை பச்சைக்கிளிகளுக்கு உணவளிக்க
செலவிடுவதாகக் கூறுகிறார்
காலை, மாலை என இரு வேளைகளிலும் பச்சைக்கிளிகள் மட்டுமல்லாது, புறா, காக்கை, சிட்டுக்குருவி, அணில் என ஒரு பட்டாளமே உணவு தேடி, இத்தம்பதியின் இல்லம் தேடி வருகின்றன.
இத்தம்பதி போன்று, இரக்க குணமும், உதவும் எண்ணமும் இருந்தால், வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு கிடைப்பது நிச்சயம்.
Comments