தீபாவளிப் பண்டிகை : மூன்றே நாட்களில் சென்னையில் இருந்து மூன்றரை லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குப் பயணம்
தீபாவளிப் பண்டிகைக்காக சென்னையில் இருந்து மூன்றே நாட்களில் மூன்றரை லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
சென்னை, தாம்பரம் மற்றும் மாதாவரம் ஆகிய பகுதிகளில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு கடந்த மூன்று தினங்களாக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. நேற்று மட்டும் 1827 நிர்ணய பேருந்துகளும், 611 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டதால் வெளியூர் பயணிகள் சிரமமின்றி புறப்பட்டுச் சென்றனர்.
அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மட்டுமின்றி கார்கள், இருசக்கர வாகனங்கள் போன்ற சொந்த வாகனங்களிலும், பொதுமக்கள் சாரை சாரையாய் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.
இதனால், கூடுவாஞ்சேரி முதல் மறைமலைநகர், சிங்கபெருமாள்கோவில் மற்றும் பரனூர் சுங்கச்சாவடி வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து சென்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
நள்ளிரவு வரை சென்னையில் இருந்து 3 லட்சத்து 53 ஆயிரத்து 373 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.
இதனிடையே, வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களுக்கு, சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று மட்டும் 100 விமானங்களில் 11 ஆயிரத்து 500 பேர் பயணம் செய்துள்ளனர். அதேபோன்று 100 விமானங்களில் 9 ஆயிரம் பேர் சென்னைக்கு வந்தடைந்தனர்.
Comments