அண்ணா பல்கலை.,யில் ஒரு பைசா கூட முறைகேட்டில் ஈடுபடவில்லை.. என் மீதான புகார்கள் எனக்கே ஆச்சரியம் அளிக்கின்றன - அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா

0 2506

அண்ணா பல்கலைக்கழகத்தில் நிதி மோசடி, பணி நியமனத்துக்கு லஞ்சம் என 200 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாகத் துணைவேந்தர் சுரப்பா மீது  கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கலையரசனைத் தமிழக அரசு நியமித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக நிதியில் 200 கோடி ரூபாய் முறைகேடு செய்ததில் துணைவேந்தர் சுரப்பா, துணை இயக்குநர் சக்திநாதன் ஆகியோருக்குத் தொடர்புள்ளது என்று திருச்சியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிகப் பேராசிரியர் பணிக்கு ஒவ்வொருவரிடமும் 13 லட்ச ரூபாய் முதல் 15 லட்ச ரூபாய் வரை என்ற கணக்கில் சுரப்பாவும், சக்திநாதனும் பெற்று 80 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகாரில் கூறப்பட்டுள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கலையரசனை விசாரணை அதிகாரியாக நியமித்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சுரப்பா பதவியேற்றது முதல் தற்போது வரை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பணி நியமனங்கள், நிதிப் பரிமாற்றங்கள், ஒப்பந்தங்கள், தேர்வு நடைமுறைகள், AICTE விவகாரம் உள்ளிட்ட அனைத்தையும் முழுமையாக விசாரணைக்கு உட்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

சுரப்பா மீதான புகார்களில் உண்மைத் தன்மை இருந்தால், அவர் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை, எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருப்பதற்கான வழிகள் ஆகியவற்றை அரசுக்குப் பரிந்துரைக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. 2021 மார்ச் மாதத்துடன் சுரப்பா ஓய்வு பெற உள்ள நிலையில், இந்தப் புகார்களை 3 மாதக் காலத்துக்குள் விசாரித்து அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழகம் தொடர்பானவர்களோ, பொதுமக்களோ துணைவேந்தர் சுரப்பா மீது ஏதேனும் ஊழல் குற்றச்சாட்டு அல்லது வேறு ஏதேனும் குற்றச்சாட்டு இருப்பின் புகார் அளிக்கலாம் என நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார். 

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த துணை வேந்தர் சுரப்பா, தன் மீதான முறைகேடு புகார் தொடர்பான விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தார். பணிமாறுதல் உள்ளிட்ட மிரட்டல்களுக்கு அடிபணியாததால் தன்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியிருப்பதாக அவர் குறிப்பிட்டார். தனது மகளின் சேவை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு தேவை என்பதாலேயே கவுரவ பணி கொடுக்கப்பட்டது என்றும் அவர் விளக்கம் அளித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments