போலி சாமியாரின் மாய வார்த்தைகளை நம்பி பணத்தை இழந்த குடும்பம்; மன உளைச்சலில் பெண் தூக்கிட்டு தற்கொலை..!
சென்னையில் போலி சாமியார் பண மோசடி செய்ததாக, பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாமியாரின் மாயவார்த்தைகளை நம்பி பணத்தை கொடுத்ததால் ஏற்பட்ட விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
சென்னை தியாகராய நகரில் வசித்து வரும் சீனிவாசன், தனியார் நட்சத்திர ஓட்டலில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். புதன்கிழமை இரவு சாப்பிட்டு குழந்தையோடு நடைபயிற்சி மேற்கொள்ள சென்றுள்ளார். அப்போது, அவரது மனைவி ராஜேஸ்வரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொள்ள காரணம், கே.கே நகர் பகுதியை சேர்ந்த போலி சாமியார் சுந்தர்ராஜன் தான் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ராஜேஸ்வரியின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்திய உறவினர்கள், அவரிடம் பணம் மோசடி செய்த போலி சாமியார் சுந்தர்ராஜன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தீக்குளிப்போம் என்றும் மிரட்டல் விடுத்தனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் நகர் பகுதியில் சீனிவாசன் - ராஜேஸ்வரி தம்பதி வசித்த போது, ஜாதகம் பார்ப்பதாக கூறி, சாமியார் சுந்தர்ராஜனை அணுகியுள்ளனர். அகஸ்திய சன்மார்க்க சத்சங்கம் என்ற பெயரில் பூஜைகள் நடத்தி குறைகளை தீர்ப்பதாக கூறி சுந்தர்ராஜன் பணம் வசூலித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் பழக்கம் அதிகமான நிலையில் குறைந்த விலைக்கு வீடு வாங்கி தருவதாக கூறி ,சீனிவாசனிடம் 25 லட்சம் ரூபாய் வரை வாங்கிய போலி சாமியார் சுந்தர்ராஜன், வீடும் வாங்கி தராமல் நீண்ட நாட்களாகியும் பணத்தையும் திருப்பித் தராமல் இழுத்தடித்துள்ளார்.
சுந்தர்ராஜன் கொடுத்த 5 காசோலைகளும் வங்கி கணக்கில் பணம் இல்லாமல் திரும்பியுள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த சீனிவாசன் ராஜேஷ்வரி தம்பதியர் கடந்த மாதம் 28 ஆம் தேதி பணத்தை கேட்க சென்றுள்ளனர். அப்போது தனது மனைவி ரேவதி அசோக் நகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருப்பதாகவும், பணம் கேட்டு தொல்லை செய்தால் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துவிடுவேன் என மிரட்டியதாக ஆடியோ ஆதாரத்துடன் சீனிவாசன் தெரிவித்தார்.
தங்களை போன்று பல பேர் போலி சாமியார் சுந்தர் ராஜனிடம் ஏமாந்துள்ளதால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீனிவாசன் வலியுறுத்தினார். சீனிவாசனின் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் பெற முயன்றும் சுந்தர்ராஜன் மற்றும் ரேவதியை தொடர்பு கொள்ள முடியவில்லை.
Comments