'இலங்கை கடற்படையினரிடத்தில் திடீர் மாற்றம் !'- 3 நாள்களில் நாடு திரும்பிய நாகை மீனவர்கள் மகிழ்ச்சி

0 6776
இலங்கையிலிருந்து நாடு திரும்பிய மீனவர்கள்

படகில் டீசல் தீர்ந்து இலங்கையில் கரை ஒதுங்கிய தரங்கம்பாடி மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் துன்புறுத்தாமல் விடுவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் கோடியக்கரையில் இருந்து ஒரு படகில் கடந்த 7- ம் தேதி தரங்கம்பாடியை சேர்ந்த முத்துலிங்கம், ரஞ்சித், அண்ணாதுரை, ராஜ் ஆகிய 4 பேரும் மீன் பிடிக்க சென்றனர். திரும்பும் வழியில் படகில் டீசல் தீர்ந்ததால், படகை தொடர்ந்து செலுத்த முடியாமல் தவித்துள்ளனர். இதையடுத்து, நீரோட்டத்தில் சென்ற படகு யாழ்பாணம் மாவட்டத்தில் வடமராச்சி அருகேயுள்ள மாமுனையில் கரை ஒதுங்கியது. இதையடுத்து, இலங்கை கடற்படையினரிடத்தில் மீனவர்கள் சிக்கிக் கொண்டனர்.

ஆனால், கரை ஒதுங்கிய 4 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் துன்புறுத்தவில்லை. பாதுகாப்பாக தங்க வைத்து உணவு வழங்கினர்.3 நாட்களுக்கு பிறகு, மீனவர்களின் படகுக்கு டீசல் வழங்கி அவர்கள் பிடித்த மீனுடன் நேற்றிரவு கோடியக்கரைக்கு அனுப்பி வைத்தனர்.இலங்கையில் இருந்து புறப்பட்ட நான்கு மீனவர்களும் இன்று காலை கோடிக்கரைக்கு பத்திரமாக வந்தடைந்தனர். நாகை கரையில் காத்திருந்த மீனவர்களின் உறவினர்கள் அவர்களை கண்ணீருடன் வரவேற்றனர். நாடு திரும்பிய நாகை மீனவர்கள், இலங்கை கடற்படையினரின் செயல்களை இப்பவும் நம்ப முடியாமல் தவிப்பதாக தெரிவித்தனர்.

வழக்கமாக இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி செல்லும் மீனவர்களை தாக்கி விட்டுதான் பேசவே தொடங்குவார்கள். ஆனால், இந்த நான்கு மீனவர்களையும்பாதுகாப்பாக முகாமில் தங்க வைத்து உணவு வழங்கி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தது வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்களிடையே இந்த சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . மீனவர்கள் பிடித்த மீன்களும் இன்று காலை கோடியக்கரை கடற்கரையில் ஏலம் விடப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments