குடும்பத்தையே தீர்த்துக்கட்டிய பெண் ? நெற்றிப் பொட்டில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை
சென்னை சௌகார்பேட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், புதிய திருப்பமாக, சொத்தை பிரித்து தர மறுத்ததால் கணவனையும் அவரது பெற்றோரையும் உறவினர்களுடன் சேர்ந்து மனைவியே நெற்றிப் பொட்டில் துப்பாக்கியால் சுட்டு, கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட பைனான்சியர் தலில்சந்த், அவரது மனைவி புஷ்பா பாய், மகன் ஷீத்தல் ஆகியோர் சென்னை செளகார்பேட்டை வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர். சடலங்களை கைப்பற்றி யானைகவுனி போலீசார் விசாரணையை முன்னெடுத்தனர்.
தடயவியல் துறை நிபுணர்கள் சம்பவ இடத்தில் முகாமிட்டு, தடயங்களை சேகரித்தனர். இதற்கிடையே, 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், துப்புத்துலக்க, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில், கொலை நடந்த வீட்டில் இருந்து பெண் ஒருவர் நடந்து சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தன. அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
தலில்சந்தின் மகன் ஷீத்தலுக்கு, புனேவை சேர்ந்த ஜெயமாலா என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்து 13 மற்றும் 11 வயதுகளில் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்த ஜெயமாலா, தனது 2 மகள்களுடன் புனேவில் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
மேலும், ஷீத்தலிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ள ஜெயமாலா, ஜீவனாம்ச வழக்கு தொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவும் வகையில், ராஜஸ்தான் மற்றும் சென்னையில் இருக்கும் சொத்துக்களை பிரித்து எழுதி வைக்குமாறு ஜெயமாலா கேட்டு வந்துள்ளார்.
அதற்கு கணவரும், மாமானாரும் ஒப்புக்கொள்ளாத நிலையில், ஜெயமாலாவின் சகோதர்கள் கைலாஸ், பிகாஷ் ஆகியோரும், அடிக்கடி சென்னை வந்து சொத்தை எழுதி தருமாறு தலித் சந்திடம் பேசியுள்ளனர். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் அவர்கள் 10 முறை சென்னை வந்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், புனேவில் இருந்து சகோதரர்கள் 2 பேர், சித்தப்பா, மாமா என 5 பேருடன் வந்த ஜெயமாலா, சொத்தை எழுதி வைக்கக்கூறி மீண்டும் ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதற்கு சற்றும் கணவன் குடும்பத்தினர் சம்மதிக்காததால், வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடந்ததாக சொல்லப்படுகின்றது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒரு கட்டத்தில் தன்னுடன் வந்த உறவினர்கள் உதவியுடன் கணவன், மாமனார், மாமியார் ஆகியோர் கைகளை கட்டிவைத்து விட்டு, தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் மூன்று பேரையும் நெற்றி பொட்டில் சுட்டு ஜெயமாலா கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. சொத்துக்காக கணவனையும் அவரது பெற்றோரையும் தீர்த்துக்கட்டிய பெண் உட்பட குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் புனே விரைந்துள்ளனர்.
இதனிடையே, கடந்த மாதமே முன் கள பணியாளர்கள் பயன்படுத்தும் உடை அணிந்து கொண்டு வீட்டுக்கு வந்த ஜெயமாலாவின் சகோதரர்கள் 2 பேர், சீத்தலை தனி அறையில் கட்டிப்போட்டு கடுமையாக தாக்கியுள்ளனர்.
இது குறித்து, தலில் சந்த் யானைக்கவுனி போலீசில் புகார் அளித்த நிலையிலும், குடும்ப பிரச்சனை என கருதி புகாரை பெற்றதற்கான சான்றிதழை மட்டும் கொடுத்துவிட்டு, வழக்கு பதியாமல் அலட்சியமாக இருந்துள்ளனர்.
இந்த நிலையில், 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட தலில் சந்த் புகார் மீது நடவடிக்கை எடுக்காததிற்கான காரணம் குறித்து யானைக்கவுனி போலீசாரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
Comments