ஆன்லைன் டிரேடிங்கில் ரூ.5 கோடி மோசடி... கல்லூரி பேராசிரியர் மனைவியுடன் தலைமறைவு
ஆன்லைன் டிரேடிங்கில் ஈடுபட்டு அதிக லாபம் ஈட்டலாம் என்று கூறி முதலீட்டாளர்களிடம் பணத்தை சுருட்டிக் கொண்டு தலைமறைவான பேராசிரியர் மற்றும் அவரின் மனைவியை போலீசார் தேடிவருகின்றனர்.
கோவை மாவட்டம் காங்கேயம் பாளையத்தைச் சேர்ந்த தாமோதரசாமி என்பவர் சில நாள்களுக்கு முன்பு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். மனுவில், காளப்பட்டியில் வசிக்கும் கிருஷ்ணராஜ் என்பவர் பொள்ளாச்சி கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் நடத்தி வரும் டிரேடிங் நிறுவனம் மூலமாக ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடுவதாக கூறி சுமார் 5 கோடி ரூபாய் அளவுக்கு மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறியிருந்தார்.
விசாரணையில், கிருஷ்ணராஜ் தன் மனைவி கல்யாணி மற்றும் உறவினர் சண்முகம் ஆகியோருடன் சேர்ந்து ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். தொடர்ந்து, 2019- ம் ஆண்டு கிருஷ்ணராஜ் ஆன்லைன் டிரேடிங் கம்பெனி ஒன்றை தொடங்கியுள்ளனர். ஆன்லைன் டிரேடிங்கில் பணத்தை முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று முதலீட்டாளர்களிடம் மூன்று பேரும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பி இந்த நிறுவனத்தில் ஏராளமானோர் ரூ. 7 லட்சம் முதல் 75 லட்சம் வரை முதலீடு செய்துள்ளனர்.
இந்த நிலையில், கிருஷ்ணராஜ் முதலீட்டுக்கான லாபத் தொகையை தராமல் காலம் தாழ்த்தியதையடுத்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, கிருஷ்ணராஜ் மனைவியுடன் தலைமறைவாகி விட்டார். கிருஷ்ணராஜின் உறவினர் சண்முகத்தை பொள்ளாச்சியில் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மனைவியுடன் தலைமறைவாகவுள்ள பேராசிரியரை தேடி வருகின்றனர்.
Comments