திருப்பதி வெங்கடாசலபதி பெயரில் சீட்டு வசூல்... 50 லட்சம் பணத்துடன் சூலூர் தி.மு.க பிரமுகர் மாயம்
திருப்பதி வெங்கடாச்சலபதி பெயரில் சீட்டு வசூல்... 50 லட்சம் பணத்துடன் சூலூர் தி.மு.க பிரமுகர் மாயம்
சூலூரில் அரசு அனுமதியின்றி ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களிடம் வசூல் செய்த ரூ. 50 லட்சம் பணத்துடன் சூலூர் நகர தி.மு.க துணை செயலாளர் ஜெயா மாயமாகியுள்ளதாக பொதுமக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
கோவையை அடுத்த சூலூர் நகர திமுக துணை செயலாளராக இருக்கும் ஜெயா, திருப்பதி என்ற பெயரில் 15 வருடமாக சீட்டு நிறுவனம் நடத்தி வந்துள்ளார். சீட்டு தொகை வசூலிக்கும் பாஸ்புக்கில் வெங்கடாசலபதியின் படமும் இடம் பெற்றிருக்கும். சூலூர் மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் பொதுமக்களிடம் மாதாமாதம் தவணை தொகை வசூல் செய்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக சீட்டு எடுத்தவர்களுக்கு பணம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால், ஏலம் எடுத்தவர்கள் சீட்டு தொகையைத் தருமாறு ஜெயாவிடம் நெருக்கடி கொடுத்து வந்தனர். இன்று போய் நாளை வா என்ற கதையாக இந்தா தருகிறேன், அந்தா தருகிறேன் என்று சீட்டு பணத்தை கொடுக்காமல் ஜெயா இழுத்தடித்தார்.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த வாடிக்கையாளர்கள் 40-க்கும் மேற்பட்டோர் சூலூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் ஜெயா மாயமாகி விட்டது தெரிய வந்தது. தற்போது, ஜெயாவைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். ஜெயாவிடம் சீட்டு எடுத்தவர்கள் முறையாக பணத்தைத் திருப்பி செலுத்தவில்லை என்பதால் சீட்டு நடத்தியதில் ஜெயா நஷ்டமடைந்ததாக சொல்லப்படுகிறது. எனினும், ஜெயா பிடிபட்டால்தான் உண்மை நிலவரம் தெரிய வரும் என்று போலீஸார் கூறுகின்றனர்.
Comments