'மனு கொடுத்துட்டு வீட்டுக்கு போறதுக்குள்ள போன் வந்துடுச்சு!' - வியப்பு தெரிவித்த தூத்துக்குடி பெண்

0 20799

‘மனு கொடுத்துவிட்டு வீட்டுக்கு போறதுக்குள்ள எங்களுக்கு போன் வந்துட்டுச்சு’ என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தங்களுக்கு போன் வந்து விட்டதாகத் தூத்துக்குடியில் 2 மணி நேரத்தில் வேலை பெற்ற பெண் வியப்புடன் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தூத்துக்குடியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தூத்துக்குடி தெற்குக் காவல் நிலையம் அருகே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கார் வந்த போது, சாலை ஓரத்தில் கையில் மனுவுடன் மாரீஸ்வரி என்ற மாற்றுத்திறனாளி பெண் பரிதாபமாக நின்று கொண்டிருந்தார். இதைப் பார்த்த முதல்வர் மாரீஸ்வரியிடம் என்ன, ஏதுவென்று விசாரித்தார். அப்போது, மாரீஸ்வரி தனக்கு அரசு வேலை கேட்டு முதல்வரிடம் மனு அளித்தார்.

மனுவைப் பெற்றுக் கொண்ட முதல்வர், 2 மணி நேரத்துக்குள் சுகாதாரத் துறை மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வார்டு மேலாளர் பணி வழங்க  நடவடிக்கை எடுத்தார். உடனடியாக , பணி நியமன ஆணையும் மாரீஸ்வரிக்கு வழங்கப்பட்டது.  பணி ஆணையைப் பெற்ற மாரீஸ்வரி கண்ணீர் மல்க முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். மாரீஸ்வரிக்கு மாதம் ரூ.15,000 சம்பளம் கிடைக்கும்.

வேலை கிடைத்தது குறித்து மாரீஸ்வரியிடம் பேசிய போது, ''எனக்கு சொந்த ஊர் கோவில்பட்டி. என் கணவரோட ஊர்தான் தூத்துக்குடி. முதலமைச்சர் இங்க வந்ததால, நானும் என் கணவர் மற்றும் மகளுடன் மனு கொடுக்க நின்றிருந்தோம். எங்களைப் பார்த்து முதலமைச்சரே வண்டியை நிறுத்தி பக்கத்துல கூப்பிட்டாரு. அப்போதான், என்னோட கஷ்டத்தையும் இயலாமையையும் அவரிடம் சொன்னேன். ஆனால், இப்படி உடனடியாக வேலை கிடைக்குமுன்னு நினைக்கவில்லை. முதலமைச்சர் ரொம்ப சாதாரணமாத்தான் மனுவை வாங்கினாரு.

நாங்களும் மனு கொடுத்துவிட்டு வீட்டுக்கு போய்கிட்டு இருந்தோம். அப்போதான், கலெக்டர் அலுவலகத்துலேருந்து பேசுறோம். 'நீங்க எங்க இருக்கீங்க'னு கேட்டாங்க. நாங்க விவரத்தை சொன்னதும், அதே இடத்தில் இருங்க, இப்போ உங்களுக்கு வண்டி அனுப்புறோம்’னு எதிர்முனைல இருந்து சொன்னாங்க. எங்களுக்கு ஒரே ஆச்சரியமா இருந்துச்சு. கொஞ்ச நேரத்துல ஒரு போலீஸ் வண்டி வந்து எங்களை ஏத்திகிட்டு கலெக்டர் ஆபிஸ்க்கு கொண்டு போனாங்க.

பின்ன, அங்க வச்சுதான் சி.எம். எங்களுக்கு ஆர்டரைத் தந்தாரு. நான் சத்துணவு அமைப்பாளர் வேலைக்கும் விண்ணப்பிச்சுருகேனு முதல்வர்கிட்ட சொன்னேன். உங்களுக்கு இந்த வேலைதான் பொருத்தமாக இருக்கும். இந்த வேலையே பாருங்கனு அக்கறையோட முதுல்வர் சொன்னாரு. இப்போ, மீடியாவுலலாம் செய்தி வந்துட்டதால என்னோட போன் ரிங் ஒலிச்சிட்டே இருக்குது. இப்போ, உங்ககிட் பேசிட்டுருக்கும் போது கூட கால் வந்துட்டு இருக்குது'' என்றவரின் முகத்தில் ஒரு மட்டற்ற மகிழ்ச்சி தெரிந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments