லடாக் எல்லையில் இருந்து படைகளை விலக்க இந்தியா - சீனா முடிவு எனத் தகவல்..!
எல்லைப் பிரச்சனையில் திருப்பு முனையாக, கிழக்கு லடாக்கில் இருந்து துருப்புக்களை 3 கட்டங்களாக வாபஸ் பெற்றுக் கொள்ள இந்தியாவும், சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 6 ஆம் தேதி இந்திய-சீன ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான 8 ஆவது சுற்று பேச்சுவார்த்தை சூஷூலில் நடந்தது. அதில், கடந்த ஏப்ரல்-மே மாத களநிலவரப்படி எந்த இடத்தில் இருந்தனரோ அங்கு இரு தரப்பு படையினரும் திரும்பிச் செல்ல வேண்டும் என ஏகமனதாக இருதரப்பும் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. பிரச்சனைக்குரிய பாங்கோங் ஏரிக்கரையில் இருந்து ஒரு வார காலத்தில் 3 கட்டங்களாக படையினர் வாபஸ் பெறப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.
முதற்கட்டமாக ஒரே நாளில், டாங்குகள் மற்றும் ராணுவ வண்டிகளை முன்களப் பகுதிகளில் இருந்து அகற்றுவதுடன் அவற்றை கட்டுப்பாட்டு எல்லையில் இருந்து குறிப்பிட்ட தொலைவுக்கு அப்பால் நிறுத்த ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.
இரண்டாவது கட்டமாக, பாங்கோங் ஏரியின் வடக்கு கரையில் இருந்து இரு நாடுகளும் 30 சதவிகித துருப்புகளை தலா 3 நாட்களில் வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பிங்கர் 8ன் கிழக்குப் பகுதியில் இருந்து சீனா தனது துருப்புகளை வாபஸ் பெறும், இந்தியா தனது வீரர்களை தான்சிங் தாபா ராணுவ சாவடிக்கு அருகே கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3 ஆவது கட்டத்தில் பாங்கோங் ஏரியின் தெற்கு கரை முன்களப் பகுதியில் இருந்து இரு தரப்பு வீரர்களும் அகன்று செல்ல வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. படைகளை வாபஸ் பெறும் நடவடிக்கையை உறுதி செய்ய கூட்டு குழுவை அமைக்கவும், ஆளில்லா விமானங்கள் வாயிலாக அதை கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
படைகளை வாபஸ் பெற முடிவு செய்தாலும், கால்வன் தாக்குதலுக்குப் பிறகு சீனா மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளதால், இந்தியா மிகவும் எச்சரிக்கையுடன் இந்த வாபஸ் நடவடிக்கையில் ஈடுபடும் என கூறப்படுகிறது.
Comments