மகள்களுக்கும் சேர்த்து சொத்து; மூதாட்டி கொலை!- மகன்கள், மருமகள்கள், பேரன்கள் என 7 பேர் கைது
திருமங்கலம் அருகே மகள்களுக்கும் சேர்ந்து சொத்தைப் பிரித்துக் கொடுக்க கருதிய மூதாட்டியை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மகன்கள், மருமகள்கள், பேரன்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே சொக்கநாதன் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முத்துக்கருப்பன் - பாப்பா தம்பதி. இவர்களுக்கு 4 மகன்களும் 3 மகள்களும் உள்ளனர். மகன்களில் இரண்டு பேர் இறந்து விட்டனர். மூத்த மகன் பொன்ராம் திருமங்கலத்திலும் கண்ணன் பொட்டல்பட்டியிலும் வசிக்கின்றனர். மகள்களில் விவகாரத்தான இரண்டு பேல் பெற்றோருடன் வசித்து வருகின்றனர். சொக்கநாதன்பட்டியில் முத்துகருப்பன் பெயரில் 2.50 ஏக்கர் நிலம் பாப்பம்மாள் பெயரில் 30 சென்ட் நிலம் உட்பட 2.80 ஏக்கர் நிலம் உள்ளது. சொக்கநாதன்பட்டி அருகே திருமங்கலம் - மதுரை சுற்றுச்சாலை செல்வதால் நிலத்தின் மதிப்பு தற்போது பல மடங்கு உயர்ந்துள்ளது.
இதனால், முத்துக்கருப்பனின் மகன்கள் பொன்ராம் மற்றும் கண்ணன் நிலத்தைத் தங்கள் இருவருக்கும் பங்கிட்டு தரும்படி கேட்டுள்ளனர். அதற்கு, தாயார் பாப்பா தனது மூன்று மகள்களுக்கும் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும், அப்போதுதான் சொத்தை பிரிக்க ஒப்புக்கொள்வேன். இல்லையென்றால் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார். சொத்து பிரச்சினை தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதால், திருமங்கலம் போலீசார் முத்துக்கருப்பன், பாப்பா மற்றும் மகன்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதும்,பாப்பா தன் முடிவில் உறுதியாக இருந்தார்.
இந்த நிலையில், கடந்த 9- ஆம் தேதி இரவு பாப்பா வீட்டுக்கு சென்ற பொன்ராம், கண்ணன் பேரன்கள் அவரின் சிவன் , ரகு , கணேஷ்குமார் ஆகிய 5 பேரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது, பாப்பாவுக்கும் அவர்களுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த கண்ணன், பொன்ராம் மற்றும் பேரன்கள் என 5 பேரும் சேர்ந்து பாப்பாவை, அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே பாப்பா இறந்து போனார்.
சொத்துக்காக மூதட்டியை கொலை செய்த மகன்கள் கண்ணன், பொன்ராம் மூதாட்டியின் பேரன்கள் ரகுராம், சிவன்ராஜ், கணேஷ்குமார் ஆகிய 5 பேருடன் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக பொன்ராமின் மனைவி ராஜாத்தி, கண்ணனின் மனைவி மாரியம்மா என 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Comments