மனு கொடுத்த 2 மணி நேரத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பணி ஆணை; 'முதல்வன்' பட பாணியில் முதல்வர் நடவடிக்கை
சாலையில் காரில் சென்று கொண்டிருந்த போது, வேலை கேட்டு மனு அளித்த மாற்று திறனாளி பெண்ணுக்கு 2 மணி நேரத்தில் சுகாதாரத்துறையில் பணி வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மின்னல் வேக நடவடிக்கை எடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரீஸ்வரி ( வயது 28 ).மாற்று திறனாளி பெண்ணான இவர், எம்.ஏ படித்துள்ளார். தூத்துக்குடி வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அரசு மருத்துவமனையில் நவீன கருவியை தொடங்கி வைத்து விட்டு சாலையில் காரில்‘ சென்று கொண்டிருந்தார்.
தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அருகே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கார் வந்த போது, சாலை ஓரத்தில் கையில் மனுவுடன் மாரீஸ்வரி பரிதாபமாக நின்று கொண்டிருந்தார். இதை பார்த்த முதல்வர் மாரீஸ்வரியிடத்தில் என்ன ஏதுவென்று விசாரித்துள்ளார். அப்போது, மாரீஸ்வரி தனக்கு அரசு வேலை கேட்டு முதல்வரிடத்தில் மனு அளித்தார்.
மனுவை பெற்று கொண்ட முதல்வர், 2 மணி நேரத்துக்குள் சுகாதார துறை மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வார்டு மேலாளர் பணி வழங்க நடவடிக்கை எடுத்தார். உடனடியாக பணிய நியமன ஆணையும் மாரீஸ்வரிக்கு வழங்கப்பட்டது. மனு கொடுத்த 2 மணி நேரத்தில் பணி ஆணையை பெற்ற மாரீஸ்வரி கண்ணீர் மல்க முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.மாரீஸ்வரிக்கு மாதம் 15,000 சம்பளம் கிடைக்கும்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் முதல்வன் பட பாணியை நடவடிக்கையை கண்டு அ.தி.மு.க வினர் புல்லரித்து போனார்கள்.
Comments