ஆன்லைன் கந்துவட்டிக் கும்பல்...இளம் பெண்ணுக்கு ஆன்லைனில் ஆபாச மிரட்டல்

0 7792
ஆன்லைன் கந்துவட்டிக் கும்பல்...இளம் பெண்ணுக்கு ஆன்லைனில் ஆபாச மிரட்டல்

வட்டிக்கு கடன் கொடுக்கும் ஆன்லைன் செயலிகள் கந்துவட்டிகாரர்களை மிஞ்சும் வகையில் புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. இது போன்ற செயலி மூலம் கடன் பெற்ற பெண்ணிற்கு அவரது தனிப்பட்ட தகவல்களை திருடி மிரட்டல் விடுக்கும் அதிர்ச்சி ஆடியோ ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா பரவல் காலகட்டதில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு மீதான மோகம் வைரஸ் போன்றே பலரிடமும் பரவிவிட்டது. இதனால் பணத்தை இழந்த பலர் கடனில் சிக்கி உயிரை விட்டதால் தமிழக அரசு ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய முடிவு செய்துள்ளது. இதே போன்று ஆன்லைனில் வட்டிக்கு கடனளிக்கும் செயலிகளால் பணத்தை இழந்த பலர் அவர்களிடம் சிக்கி கொண்டு தவித்து வருகின்றனர்.

iRupee, Cash bull, money more, Kissht போன்று உதார் லோன் என்ற செயலியும் ஆன்லைனில் வட்டிக்கு கடன் கொடுக்கின்றனர். இது போன்ற செயலியில் நம் ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கி கணக்கு விவரங்கள் கொடுக்க வேண்டும். நாம் கடனாக 5,000 ரூபாய் கேட்டால், பிராசசிங் காஸ்ட், வட்டி என எடுத்து கொண்டு 3,500 ரூபாய் மட்டும் கொடுப்பார்கள். ஒரு வாரத்தில் வட்டியோடு அசலை செலுத்தாவிட்டால் தினமும் 500 அபராத வட்டி என கேட்டு தொந்தரவு செய்வார்கள்.

ஆன்லைனில் தானே கடன் பெற்றுள்ளோம் என அலட்சியப்படுத்தினால், நமது செல்போனில் உள்ள எல்லா தொடர்பு எண்களுக்கும் போன் செய்து கடன் பெற்றவர் பெயரை சொல்லி மிரட்டல் விடுக்க தொடங்குகிறார்கள். 5000 ரூபாய் கடனுக்கு வட்டி மேல வட்டி போட்டு பெரும் கடனாளி ஆக்கி விடுவார்கள். பிளாக் மெயில் செய்யவதற்கென்றே இது போன்ற செயலி நிறுவனங்கள் நூற்றுக் கணக்கானோரை மாத சம்பளத்திற்கு பணிக்கு அமர்த்தியுள்ளனர்.

நாட்கள் செல்ல செல்ல, மிரட்டல் வேறு விதமாக இருக்கும் என்கின்றனர் விவரமறிந்த சைபர் கிரைம் நிபுணர்கள். இது போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்யும் போதே, தொடர்பு எண்கள், புகைப்படம், வீடியோ அடங்கிய கேலரிகளை இந்த செயலிகள் கண்காணிக்க அனுமதிப்பதால் செல்போனில் உள்ள சுய விவரங்களை திருடி விடுகின்றனர். இதை வைத்து ஆபாச மிரட்டல்களும் விடுத்து கந்து வட்டி கும்பலை விஞ்சி அச்சுறுத்துகின்றனர். இந்த ஆன்லைன் கந்துவட்டி கும்பலிடம் சிக்சிய பெண் ஒருவருக்கு ஆபாச மிரட்டல் விடுத்த ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்ற செயலிகளை தடை செய்ய வேண்டும் என தமிழக சிபிசிஐடி டிஜிபியிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நாட்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்த பணத்தை மீட்பதற்கும், கை செலவிற்கும் என கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் பலரும் இந்த ஆன்லைன் கந்துவட்டிக்காரர்களிடம் கடன் பெற்று சிக்கியுள்ளனர். ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதோடு மட்டுமில்லாமல் இது போல சட்டவிரோத, ஆன்லைன் கடனளிக்கும் செயலிகளையும் விரைந்து தடை செய்தால் விளைவுகளை தவிர்க்கலாம் என்கின்றனர் சைபர் நிபுணர்கள். 

அதே நேரத்தில் தேவையற்ற செயலிகளை செல்போனில் பதிவிறக்கம் செய்து கட்டுப்பாடில்லாமல் கடனை வாங்கி வைத்துக் கொள்வதும், சொந்த காசில் சூனியம் வைப்பதும் ஒன்று என்பதை ஆன்லைன் கடனாளிகள் உணரவேண்டும்..!

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments