இடைத்தேர்தல்.! வெற்றிக்கொடி நாட்டிய பாஜக.!
நாட்டில், 11 மாநிலங்களில், 59 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், 31 தொகுதிகளில் பாஜக வெற்றிப்பெற்றுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 28 தொகுதிகளில், 19 இடங்களை வென்றதன் மூலம், சிவ்ராஜ் சிங் செளகான் தலைமையிலான பாஜக ஆட்சி அருதிபெரும்பான்மை பெற்று, ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில், 28 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், 19 இடங்களில் பாஜகவும், காங்கிரஸ் 8 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்திலும், வெற்றிப் பெற்றுள்ளன.
தெலங்கானாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில், துபாக் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், ஆளுங் கட்சியான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, தோல்வியடைந்துள்ளது. 620 வாக்குகள் வித்தியாசத்தில், பாஜக வேட்பாளர் எம்.ரகுநந்தன் ராவ், வாகை சூடியுள்ளார்.
கர்நாடகாவில், பெங்களூரு புறநகர் தொகுதியான ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில், சினிமா தயாரிப்பாளரும், அரசியல்வாதியுமான முனிரத்னா வெற்றிப் பெற்றுள்ளார். சிரா தொகுதியில், பாஜகவின், டாக்டர் ராஜேஷ் கெளடா வாகை சூடியுள்ளார்.
உத்திரப்பிரதேசத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி 5 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 2 தொகுதிகளிலும் வெற்றிப்பெற்றுள்ளது.
மணிப்பூரில் 5 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில், பாஜக 4 இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வென்றுள்ளார்.
ஜார்க்கண்டில், 2 தொகுதிகளில், ஜேஎம்எம், காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சிகள், தலா ஒரு இடத்தில் வென்றுள்ளன. ஒடிசாவில் 2 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், ஆளும் கட்சியான பிஜூ ஜனதா தளம் வாகை சூடியுள்ளது.
சத்தீஸ்கரில் மற்றும் ஹரியானா மாநிலங்களில், தலா ஒரு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், காங்கிரஸ் வென்றுள்ளது.
Comments