'தோற்றால் உடனே ஓட்டு இயந்திரங்களை குறை சொல்வதா?' - காங்கிரஸாருக்கு கார்த்தி சிதம்பரம் கேள்வி
காங்கிரஸ் கட்சியினர் ஓட்டு இயந்திரங்களை குறை சொல்வதை நிறுத்துங்கள் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி கருத்து தெரிவித்துள்ளார்.
பிகார் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 74 இடங்களில் முன்னணியில் உள்ளது. கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் 49 இடங்களிலும் ஆட்சியை பிடிக்கும் என்று கருதப்பட்ட ராஸ்டிரிய ஜனதா தளம் 66 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 18 இடங்களிலும் முன்னணி பெற்றுள்ளன. காலையில் காங்கிரஸ் கட்சி கூட்டணி முன்னணியில் இருந்த நிலையில் சற்று நேரத்தில் பா.ஜ.க கூட்டணி முன்னிலை பெற்றதால், ஓட்டு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டு விட்டதாக வதந்தி பரவியது.
காங்கிரஸ் கட்சி தலைவர் உதித் ராஜ் தன் ட்விட்டர் பக்கத்தில், செயற்கைகோள் வழியாக ஓட்டு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டு விட்டதாக குற்றம் சாட்டினார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஓட்டு இயந்திரம் பயன்படுத்தப்பட்டிருந்தால், டொனால்ட் டிரம்ப் தோற்றிருக்க மாட்டார். செயற்கைக் கோள்களை தரையில் இருந்து கட்டுப்படுத்த முடியும் போது, ஓட்டு இயந்திரங்களை ஏன் ஹேக் செய்ய முடியாது'' என்றும் ட்விட்டரில் அவர் கேள்விகளை எழுப்பியிருந்தார்.
உதித்ராஜ் டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி தரப்பில் போட்டியிட்டு எம்.பியானவர் . தற்போது, காங்கிரஸ் கட்சியில் இணைந்து அந்த கட்சியின் செய்தி தொடர்பாளராக உள்ளார்.
இந்த நிலையில், தன் ட்லிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள கார்த்தி சிதம்பரம், ஓட்டு இயந்திரங்களை குறை சொல்வதை முதலில் நிறுத்த வேண்டிய நேரமிது. தேர்தலில் தாங்கள் தோற்கும் போதெல்லாம் ஓட்டு இயந்திரங்களை குறை சொல்கிறார்கள். ஓட்டு இயந்திரங்கள் மீது குற்றச்சாட்டுகளை அறிவியல் பூர்வமாக யாரும் நிரூபிக்கவில்லை. எனது அனுபவத்தின்படி, ஓட்டு இயந்திரங்கள் நம்பகமான துல்லியத்தன்மை கொண்டது '' என்று தெரிவித்துள்ளார்.
Comments