பீகார் சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகள் வெளியாக நள்ளிரவுக்கு மேல் ஆகலாம் என தேர்தல் ஆணையம் தகவல்
பீகார் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து, அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாக நள்ளிரவுக்கு மேல் ஆகலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர்கள் டெல்லியில் செய்தியாளர்ளை சந்தித்தனர். அப்போது பீகார் சட்டமன்ற தேர்தலில் முன்னர் வாக்கு எண்ணிக்கை 38 இடங்களில் நடைபெறும் என்றும், இந்த முறை 55 இடங்களில் நடைபெறுவதாகவும் தெரிவித்தனர்.
வாக்கு சாவடிகளின் எண்ணிக்கையும் கடந்தமுறையைவிட 63 சதவீதம் அதிகம் என்றும், அதேசமயம் எண்ணும் மையங்களில் மேசைகளின் எண்ணிக்கை குறைவு என்றும் தெரிவித்தனர்.
வழக்கமாக வாக்கு எண்ணிக்கை 26 சுற்றுகள் இருக்கும் என்றும், இந்த முறை ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் சராசரியாக 35 சுற்றுகள் என்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். மொத்தம் 4 கோடியே 10 லட்சம் வாக்குகள் பதிவானதாகவும், பிற்பகல் 1 மணியளவில் சுமார் 1 கோடி வாக்குகள் எண்ணப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.
எனவே வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் உறுதியாக நள்ளிரவுக்கு மேல் ஆகலாம் என தேர்தல் ஆணையம் கூறியது. இதன் பிறகு பிற்பகல் 3 மணி நிலவரப்படி, 40 சதவீதம் எண்ணப்பட்டிருந்தன. பிற்பகல் 3 மணி வரை 1.60 கோடி வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டிருந்தன.
Comments