பீகார் தேர்தல் - பாஜக கூட்டணி முன்னிலை..!

0 6042
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கும் முன்னிலை நிலவரம் வெளியாகி உள்ள நிலையில், பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.

பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. ஆர்.ஜே.டி-காங்கிரஸ் கூட்டணி, 100க்கும் மேற்பட்ட இடங்களைப் பெற்றாலும், பின்னடைவையே எதிர்கொண்டுள்ளது.

243 இடங்களை கொண்ட, பீகார் சட்டப்பேரவைக்கு, அக்டோபர் 28ஆம் தேதி, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில், 3 கட்டங்களாக, சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 4 கோடியே 10 லட்சம் வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குகள் பலத்த பாதுகாப்புடன், 55 மையங்களில், காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவும் செய்யப்படுகிறது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்றது.

இதனைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. அதில், ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணியும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணியும், மாறி, மாறி முன்னிலை பெற்றன. ஆனால், காலை 10 மணி வாக்கில், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், - பாஜக கூட்டணி, பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை காட்டிலும் கூடுதல் இடங்களில் முன்னிலைப் பெற்றது.

இதனால், ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி பின்னடைவை எதிர்கொண்டது. நண்பகல் 12 மணி வாக்கில், ஆர்.ஜே.டி - காங்கிரஸ் கூட்டணி, ஓரிரு இடங்களை கூடுதலாப் பெற்றாலும், அதனால் எந்த பயனும் கிட்டவில்லை.

நண்பகல் 1 மணியளவில், வேட்பாளர்கள் முன்னிலை பெறுவதில், வாக்குகள் வித்தியாசம், சுமார் 80 தொகுதிகளில் ஆயிரத்திற்கும் கீழாகச் சென்றது. இதனால், வாக்கு எண்ணிக்கையில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த, மிக கவனமுடன், பொறுமையாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.

வழக்கமாக 26 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும் நிலையில், இம்முறை, 35 சுற்றுகளாக, வாக்குகள் எண்ணப்படுவதால், தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவர, இரவு வரை காத்திருக்க வேண்டி வரலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பீகார் தேர்தலில், எந்த கட்சி தனிப்பெரும் கட்சி என்பதில், பாஜகவுக்கும், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்திற்கும் இடையே, பகற்பொழுதில் கடும் போட்டி நிலவியது. ஆனால், மாலை 4 மணியளவில், பாஜக 75 இடங்களில் முன்னிலை பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. 63 இடங்களுடன், ராஷ்ட்ரிய ஜனதா தளம், இரண்டாவது தனிப்பெருங் கட்சியாக மாறியிருக்கிறது.

ஐக்கிய ஜனதா தளம், 47 தொகுதிகளிலும், காங்கிரஸ் வெறும் 19 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

ஆர்.ஜே.டி - காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் சுதந்திர லெனினிஸ்ட் ஆகிய இடதுசாரி கட்சிகள், 19 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments