ம.பி. இடைத் தேர்தல்...பாஜக முன்னிலை
மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஜக 15 இடங்களில் முன்னிலை வகிக்கிறது
மத்திய பிரதேச சட்டப்பேரவையில் உள்ள 229 தொகுதிகளில் ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்கள் 25 பேர் பதவியை ராஜினாமா செய்ததோடு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தனர். இதையடுத்து அங்கு ஆட்சியிலிருந்த கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றது.
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்ததால் காலியான 25 தொகுதிகளுக்கும், 3 எம்எல்ஏக்கள் உயிரிழந்ததால் காலியான இடங்களுக்கும் என மொத்தம் 28 தொகுதிகளுக்கு கடந்த 3ம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்பட்டது.
மாநிலத்தை ஆளும் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசுக்கு, சட்டப்பேரவையில் 107 இடங்கள் மட்டுமே உள்ளன. சட்டப்பேரவையில் அக்கட்சி தனிப்பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சியை தக்க வேண்டுமெனில் குறைந்தது மேலும் 8 இடங்கள் தேவைப்படுகின்றன.
இந்நிலையில் 28 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பாஜக 15 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 1 இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.
குஜராத் மாநிலத்தில் இடைத் தேர்தல் நடைபெற்ற 8 தொகுதிகளில் ஆளும் பாஜக 7 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது.
Comments