நிதிஷ்குமார்-தேஜஸ்வி யாதவ் மோதல்...அரியாசனம் யாருக்கு?

0 1974
நிதிஷ்குமார்-தேஜஸ்வி யாதவ் மோதல்...அரியாசனம் யாருக்கு?

பீகார் தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணிக்கும், ராஷ்ட்ரிய ஜனதாதளம் - காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மகா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. 

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசிய நிதிஷ்குமார், மத்திய அரசின் திட்டங்களை பட்டியலிட்டதுடன், தங்கள் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றால் பீகாரை வளர்ச்சி பெற்ற மாநிலமாக மோடி மாற்றுவார் என வாக்குறுதி அளித்தார். இறுதிக்கட்ட பிரச்சாரத்தின்போது, இதுவே தனது கடைசித் தேர்தல் என கண்கலங்கப் பேசினார்.

லாலு பிரசாத்தின் மகனும், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் முதலமைச்சர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ், பிரசாரத்தின் போது நிதிஷ்குமாரின் ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். 15 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தும், மாநிலத்தில் வளர்ச்சியை உருவாக்க நிதிஷ்குமார் தவறிவிட்டதாகவும், வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார். தங்களது கூட்டணி ஆட்சி அமைந்தால், 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

தேர்தலுக்கு முன்பு வரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த லோக் ஜன்சக்திக் கட்சியின் சிராக் பாஸ்வான், நிதிஷ்குமாரின் ஆட்சியை கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அத்துடன் ஐக்கிய ஜனதாதளத்திற்கு எதிராக இத்தேர்தலில் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளார்.

இந்தியா டுடே, ரிபப்ளிக் டிவி, டைம்ஸ் நவ் ஆகியவை வெளியிட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில், எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாகத் தெரிவித்துள்ளன. இதனால் நான்காவது முறையாக நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராவாரா? அல்லது முதன்முறையாக இளம்தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆட்சிக் கட்டிலில் அமர்வாரா என்பதற்கான விடை சில மணி நேரங்களில் தெரிய வரும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments