தீபாவளி விற்பனைக்கு கையப்பிடிச்சி இழுத்தியா ?... 20 பேர் கைதான பின்னணி

0 30405

கோவை கடைவீதியில் நின்று தீபாவளிக்கு ஜவுளி எடுக்க வருமாறு வாடிக்கையாளர்களுக்கு இடையூறு செய்ததாக சிறுகடைகளின் விற்பனை பிரதிநிதிகள் 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கையப்பிடிச்சி இழுத்தியா ? என்று 20 பேரிடம் போலீசாரை கேட்க வைத்த சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

புத்தாடைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற தீபாவாளி போன்ற பண்டிகை நாட்களில் ஜவுளிவாங்கும் எண்ணத்தில் கடை வீதிக்கு வரும் வாடிக்கையாளர்களை தங்கள் கடைக்கு இழுப்பதற்காக சிறிய அளவிலான கடையின் வாசலில் ஒரு விற்பனை பிரதிநிதியை நிறுத்தி வைத்து கையை பிடித்து இழுக்காத குறையாக பெண்களையும் , ஆண்களையும் தங்கள் கடைக்கு வர அழைப்பு விடுப்பது காலம் காலமாக இருக்கும் வழக்கம்.

கோவையின் முக்கிய வணிக ஸ்தலமாக விளங்க கூடிய பெரியகடை வீதியில் கடையின் வாசலில் நின்று கொண்டு வாடிக்கையாளர்களை கையை பிடித்து இழுத்து கடைக்கு அழைத்துச்சென்றதாக காவலுக்கு நின்றிருந்த போலீசாரிடம் வீரகேரளத்தை சேர்ந்த பெண் ஒருவர் வாய்மொழியாக புகார் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

இதையடுத்து அங்கு பெரியகடை போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். சாலையில் நின்று வாடிக்கையாளர்களை வம்படியாக தங்கள் கடைக்குள் அழைத்துக் கொண்டிருந்த 20 விற்பனை பிரதிநிதிகளை ஒருவர் பின் ஒருவராக அதிரடியாக
கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச்சென்றனர்.

இதன் பின்னர் தான் காவல்துறையினருக்கு சட்ட சிக்கல் உருவானது. கையை பிடிச்சி இழுத்தியா ? என்ற கேள்விக்கு இல்லையென்பதே அவர்களிடம் இருந்து பதிலாக வந்தது. கையை பிடித்து இழுத்ததாக எந்த ஒரு விற்பனை பிரதிநிதி மீதும் எழுத்து பூர்வமாக ஒருவர் கூட புகார் அளிக்கவில்லை.

மேலும் கையை பிடித்து இழுத்ததற்கான சிசிடிவி ஆதாரங்களும் இல்லாத போது, எப்படி கையை பிடித்து இழுத்ததாக 20 பேரை கைது செய்ய இயலும் ? என்று வணிகர் சங்கங்கள் காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பியதால், 20 பேர் மீதும் பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக 75 சட்டபிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல் நிலைய ஜாமீனில் விடுத்து வெளியே அனுப்பும் நிலமை போலீசாருக்கு ஏற்பட்டது.

பெரிய கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் தானாக சென்று விடுவார்கள், ஆனால் சிறிய அளவில் கடைவீதியில் ஜவுளிக்கடை நடத்திவரும் தங்கள் கடைகளுக்கு கூவி அழைத்தால் தான் வாடிக்கையாளர்கள் வருவார்கள்..! எங்களது வாழ்க்கை சக்கரமும் சுழழும்..! என்கின்றனர் சிறுகடை வியாபாரிகள்.

அதே நேரத்தில் இந்த கைது நடவடிக்கை ஒரு எச்சரிக்கை என்றும் வாடிக்கையாளர்களை மறித்து, வம்படியாக தொந்தரவு செய்வதை விடுத்து விருப்பம் உள்ளவர்களை அழைத்துச்சென்று வியாபாரம் செய்வதே நாகரீகமாக இருக்கும் என்று காவல்துறையினர் அறிவுருத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments