பள்ளிகளை திறக்கலாமா.? பெற்றோர் கூறுவது என்ன?
தமிழகத்தில் வருகிற 16-ம் தேதி முதல் பள்ளிகளை திறப்பதற்கான கருத்துக்கேட்பு கூட்டம் நடந்து முடிந்துள்ள நிலையில், பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க வேண்டும் என்றே கருத்துக் கூறியுள்ளனர். அதே சமயம் படிப்பை விட குழந்தைகளின் உயிர் முக்கியம் என்று சில பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகிற 16-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்காக பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் திங்கட்கிழமை நடைபெற்றது. பெற்றோர்கள், மாணவர்கள் பள்ளிகளுக்கு நேரில் வந்து தங்கள் கருத்துக்களை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து வழங்கினர். பள்ளிகளுக்கு நேரில் வர இயலாத பெற்றோர்கள் கடிதம், மின்னஞ்சல், செல்போன் வாயிலாக கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், பெரும்பலான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க வேண்டும் என்றே கருத்து கூறியுள்ளனர். வீட்டில் இருக்கும் குழந்தைகள் பெரும்பாலும் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதை விட வீடியோ கேம்ஸ் விளையாடுவதில் தான் அதிகளவு ஆர்வத்தை காட்டுவதாக பெற்றோர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் அரசு பள்ளிகளை திறந்தால், குழந்தைகளை தாராளமாக பள்ளிக்கு அனுப்ப தயாராக இருப்பதாகவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
வகுப்புகளை தனித்தனியாக பிரித்து குறைவான மாணவர்களுடன் வகுப்புகளை நடத்தலாம் என்றும் சில பெற்றோர் யோசனை கூறியுள்ளனர்.
அதே சமயம், பள்ளிகளில் தனிநபர் இடைவெளியுடன் இருக்கைகள் அமைத்து, பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு முகக்கவசம் வழங்கி, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும் சில பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
சாதாரணமாகவே மழைக்காலங்களில் தொற்று நோய்கள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதால், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பள்ளிகளை திறக்கலாம் என்றும், படிப்பை விட குழந்தைகளின் உயிரே முக்கியம் என்றும் சிலர் கூறியுள்ளனர்.
கொரோனா பாதிப்பு முற்றிலும் ஒழிந்து பிறகு தான் பள்ளிகள் திறக்க வேண்டும் என்றும் சில பெற்றோர் தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, பள்ளிகளை மீண்டும் திறக்க பெரும்பாலான பெற்றோர்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பெற்றோர்கள், மாணவர்கள் கூறிய கருத்துக்கள் அடங்கிய அறிக்கையை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு அனுப்பி வைத்துள்ளனர். பெற்றோர் கூறிய கருத்துக்களை ஆய்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
Comments