பார்த்து, பார்த்து மக்கள் நலத்திட்டங்கள்
பீகாரில், மக்கள் நலத்திட்டங்களை, வளர்ச்சி திட்டங்களை பார்த்து பார்த்து நிதிஷ்குமார் முன்னெடுத்துள்ளார். இருப்பினும், அதுவே, அவரது வெற்றிக்கு போதுமானதாக இருக்குமா? என்பதை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.
பேரறிஞர் அண்ணாவின் பிரபலமான, "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு" ஆகிய கொள்கையைப் போன்று, நிதிஷ்குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தள கட்சி, பரஸ்பர அன்பு, சகோதரத்துவம், பரிவு ஆகிய சொல்லாடலை தலையானதாக கூறி வருகிறது.
நிதிஷ் குமாரின் ஆட்சியில், பீகாரில் அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்கள், 100 சதவிகித மின்வசதியை பெற்றிருக்கின்றன.
குஜராத், நாகலாந்து, மணிப்பூர் மாநிலங்களைத் தொடர்ந்து, பீகாரில் மதுவிலக்கை அமல்படுத்திய நிதிஷ்குமார், அதனால் ஏற்படும், வருவாய் இழப்பை ஈடுகட்ட, எத்தனால் உற்பத்திக்கு தாராள அனுமதி அளித்தார்.
இருப்பினும், போதைப்பொருள் பயன்பாடு, சட்டவிரோத மதுபான விற்பனை, கள்ளச்சாராய விற்பனை ஆகியவை கனஜோராக நடைபெறுவதால், காவல்துறை உள்ளிட்டோர் அதை தடுக்க போராடி வருகின்றனர்.
தொடர்ந்து முதலமைச்சராக பதவி வகிக்கும் 69 வயதான நிதிஷ்குமாருக்கு, நடப்பு சட்டமன்ற தேர்தல் வாழ்வா? சாவா? போராட்டமாக மாறியிருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த தேர்தலே, தனது கடைசி தேர்தல் என நிதிஷ்குமாரே பிரகடனப்படுத்தியிருக்கிறார்.
லாலுவின் மகனும், மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி, நிதிஷ் பேச்சை கிண்டலடித்திருக்கிறார். தாம் முன்பே கூறியதை, வேறு வழியின்றி நிதிஷ்குமார் ஒப்புக்கொண்டிருப்பதாக, தேஜஸ்வி கூறியிருக்கிறார்.
கிராமப்புற பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைத்தல், பெண்களின் உடல்நலம் காத்திட ஆஷா பணியாளர்கள் திட்டம், மகப்பேறு இறப்பையும், குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்கான திட்டங்கள் உள்ளிட்டவை நிதிஷ் குமார் ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டன.
ஆனால், இந்த திட்டங்களுக்கு எல்லாம், மருத்துவர்கள், செவிலியர்கள், ஆஷா உள்ளிட்ட திட்டங்களுக்கான ஊழியர்கள் பணியிடங்கள், காலியாக இருப்பதும், மக்களை சென்றடைவதில் தேக்க நிலையை ஏற்படுத்திவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், மகளிர் மேம்பாடு ஆகியவற்றிற்காக, நிதிஷ் குமார் செயல்படுத்திய நல்ல பல திட்டங்கள், அவருக்கு வாக்குகளாக மாறினாலும், வெற்றிக் கோட்டை தொட உதவுமா என்பதை, செவ்வாய்க்கிழமை முடிவுகள் கட்டியங்கூறிவிடும்.
Comments