காபிதூள் தண்ணீரில் ஊற வைத்த பிராய்லர் முட்டை !- சாதாவை நாட்டுக் கோழி முட்டை என மோசடி
கரூரில் பிராய்லர் முட்டை மீது காபிதூள் சாயம் பூசி நாட்டுக் கோழி முட்டை என விற்பனை செய்த மூதாட்டியிடத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் முட்டைகளை வாங்கி அவற்றை காபி தூள் கலந்த தண்ணீரில் ஊற வைத்து கரூரில் நாட்டுக்கோழி முட்டை என்று கூறி ஒரு கும்பல் விற்பனை செய்து வந்துள்ளது. இது தொடர்பாக , சமூக ஆர்வலர்கள் மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த நிலையில் , நேற்று காபி தூளில் ஊற வைக்கப்பட்ட முட்டைகளை மூதாட்டி ஒருவர் விற்றுக் கொண்டிருந்தார். இந்த முட்டைகளை வாங்கி சமூக ஆர்வலர்கள் கோபால் சாமி, பன்னீர் செல்வம் ஆகியோர் உடைத்து அது நாட்டுக் கோழி முட்டைதானா? என்று ஆய்வு செய்தனர். ஆய்வில், காபி தூளில் ஊற வைத்து எடுக்கப்பட்ட முட்டை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து, கரூர் நகர போலீசாருக்கும், உணவு பாதுகாப்பு அதிகாரிக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, போலீசாரிடமும், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் முன்னிலையில், பிராய்லர் முட்டையை நாட்டுக் கோழி முட்டையாக மாற்றுவது குறித்து சமூக ஆர்வலர்கள் விளக்கினர். பாத்திரம் துலக்கும் நாரில் முட்டையை தேய்த்தும், அதன் மீது இருந்த வண்ணம் கலைந்து விட்டது. போலீசார் விசாரணையில் மூதாட்டி திருச்செங்கோட்டை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. பிராய்லர் முட்டைகளை நாட்டுக்கோழி முட்டைகளாக மாற்றுவதன் பின்னணியில் பெரிய கும்பல் இருக்கிறதா என்கிற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Comments