செல்போன், ஆன்லைனை தாண்டி... மைதானத்துக்கு வரும் இளைஞர்கள்!- தொல்லை தந்த தலைமை ஆசிரியரால் சாலைமறியல்

0 3406

செல்போன், ஆன்லைன் விளையாட்டு காரணமாக மைதானத்துக்கு வந்து விளையாடும் சிறுவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தாமல் தடுக்கும் விசித்திரமான தலைமை ஆசிரியர் ஒருவர் உளுந்தூர்பேட்டையில் இருப்பது தெரிய வந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை - விருத்தாசலம் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள மைதானத்தில் உளுந்தூர்பேட்டை சுற்றுப்புறத்தை சேர்ந்த பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்வார்கள். இளைஞர்கள், சிறுவர்கள் கிரிக்கெட், கைப்பந்து , கால்பந்து , பேட்மின்டன் உள்ளிட்ட விளையாட்டுகளில் ஈடுபடுவார்கள். இந்த நிலையில், நேற்று காலை 11 மணி அளவில் இளைஞர்கள் இந்த மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த பள்ளியின் தலைமையாசிரியர் ராமச்சந்திரன் இங்கு யாரும் விளையாடக் கூடாது என்று கூறி விளையாட்டு வீரர்களை மைதானத்திலிருந்து வெளியே துரத்தினார். பிறகு, பள்ளி வாயிலையும் அடைத்து விட்டு சென்று விட்டார். இதனால் , விளையாட்டு வீரர்கள் தலைமை ஆசிரியரிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும், மைதானத்தில் விளையாட அனுமதிக்க முடியாது என்று தலைமை ஆசிரியர் உறுதியுடன் கூறி விட்டார்.

இதனால், கோபமடைந்த விளையாட்டு வீரர்கள் உளுந்தூர்பேட்டை - விருத்தாசலம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சுமார் 30 நிமிடத்துக்கு மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் விளையாட்டு வீரர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார் . தொடர்ந்து, விளையாட்டு வீரர்கள் பள்ளி மைதானத்தில் விளையாட அனுமதியளிக்கப்பட்டதை தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் சாலை மறியலை கை விட்டனர்.

பொதுவாகவே விளையாட்டுதுறையில் இந்தியா பின்தங்கியுள்ளது. ஆன்லைன் விளையாட்டு , செல்போன் காரணமாக மைதானத்துக்கு வந்து விளையாடும் சிறுவர்கள், இளைஞர்களின் எண்ணிக்கையும் வாகுவாக குறைந்து வருகிறது. இந்த சூழலில் மைதானத்துக்கு வந்து விளையாடும் வீரர்களை ஊக்கப்படுத்தா விட்டாலும் பரவையில்லை. குறைந்தபட்சம் தொல்லை தராமலாவது இருக்கலமே என்று விளையாட்டு வீரர்கள் ஆதங்கத்துடன் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments