11 காவலாளிகளைக் கட்டிப்போட்டு, பலகோடி மதிப்பிலான காப்பர் பிளேட் கொள்ளை - சேலத்தில் துணிகரம்!
சேலம் மாவட்டத்தில் தனியார் ஆலையில் காவலாளிகளைக் கட்டிப்போட்டு, பல கோடி ரூபாய் மதிப்பிலான காப்பர் பிளேட் மற்றும் காப்பர் கம்பிகளை வீச்சரிவாளுடன் வந்த முகமூடிக் கொள்ளையர்கள் திருடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள கோட்டகவுண்டம்பட்டியில் ’ஹைடெக்’ எனும் பெயரில் தனியாருக்குச் சொந்தமான இரும்பு பிரித்தெடுக்கும் தொழிற்சாலை இயங்கி வந்தது. சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தொழிற்சாலை, நிர்வாக பிரச்னை மற்றும் நஷ்டம் காரணமாகக் கடந்த ஏழு ஆண்டுகளாக மூடப்பட்டுக் கிடக்கிறது. அதனால், தொழிற்சாலை முழுவதும் மரங்கள் வளர்ந்து வனம் போலக் காட்சியளிக்கிறது. தற்போது, கடன் கொடுத்த வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்சாலையில் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், நேற்றிரவு லாரியில் வந்த 20 பேர் கொண்ட கும்பல் கத்தி மற்றும் வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஆலைக்குள் நுழைந்தனர். உள்ளே நுழைந்த முகமூடி கும்பல் பாதுகாப்புப் பணியிலிருந்த 11 காவலர்களையும் கட்டிப்போட்டுத் தனி அறையில் அடைத்தனர். பிறகு, தொழிற்சாலையில் உள்ள மின் சாதன பெட்டிகள், மின் மாற்றிகள், மின் கலன்கள் உள்ளிட்ட சாதனங்களிலிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான காப்பர் கம்பிகள் மற்றும் பிளேட்களைத் திருடியுள்ளனர். தொழிற்சாலைக்குள் நுழைந்த திருட்டுக் கும்பல், பதற்றமில்லாமல் பொறுமையாக ஐந்து மணி நேரத்துக்கும் மேலாகத் திருடியுள்ளனர்.
திருடப்பட்ட காப்பர் பிளேட்கள் மற்றும் கம்பிகளை லாரியில் ஏற்றிக்கொண்டு ஒரு காவலரை மட்டும் அடித்து பள்ளத்தில் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அதன்பிறகு, தகவல் கிடைத்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அறைக்குள் அடைக்கப்பட்ட காவலர்களை விடுவித்துள்ளனர்.
தொழிற்சாலை அமைந்துள்ள இடம் கருப்பூர் காவல் நிலையத்துக்குச் சொந்தமானதா அல்லது ஓமலூர் காவல் நிலையத்துக்குச் சொந்தமானதா என்ற குழப்பம் நிலவி வருகிறது. இதனால், வழக்குப் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கொள்ளையடிக்கப்பட்ட காப்பர் பொருள்களின் மதிப்பு பலகோடி ரூபாய் இருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
தற்போது, தொழிற்சாலைக்குள் நுழைந்த கொள்ளையர்கள் நிதானமாகக் காப்பர் சாதனங்களை மட்டும் திருடியுள்ளதால், தொழிற்சாலை பற்றி அறிந்தவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்தில் சேலம் மாநகர மற்றும் மாவட்ட போலீசார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். மேலும், கொள்ளை நடந்த போது பணியில் இருந்த காவலர்களிடம் தனித்தனியாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments