ஹசிரா-கோகா ரோபேக்ஸ் படகு சேவை... பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

0 2146
ஹசிரா-கோகா ரோபேக்ஸ் படகு சேவை... பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

ஆட்களையும் வாகனங்களையும் ஏற்றிச் செல்லும் ரோபேக்ஸ் படகு சேவையால் போக்குவரத்துச் செலவு குறைவதுடன், தொழில் வணிகம் செய்வது எளிதாவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் ஹசிராவில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள படகுப் போக்குவரத்து முனையத்தையும், ஹசிரா - கோகா இடையான படகுப் போக்குவரத்தையும் காணொலி வழியே பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், குஜராத்தின் துறைமுகத் தொழில் அம்மாநிலத்தை இந்தியாவின் நுழைவாயிலாக ஆக்கியுள்ளதாகத் தெரிவித்தார். ரோபேக்ஸ் படகு சேவையால் தொழில் வணிகம் செய்வது எளிதாவதுடன், போக்குவரத்துச் செலவு குறையும் எனக் குறிப்பிட்டார்.

குஜராத்தின் துறைமுகத் தொழிலின் அளவுக்கேற்பக் கடல்சார் பல்கலைக்கழகங்கள் அமைக்க வேண்டியுள்ள தேவையைச் சுட்டிக்காட்டினார். ரோபேக்ஸ் படகு சேவையால் வணிகர்கள் முதல் மாணவர்கள் வரை அனைத்துப் பிரிவினரும் பயனடைவர் எனத் தெரிவித்தார்.

கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் பெயர், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிகள் அமைச்சகம் என மாற்றப்படுவதாகவும் அறிவித்தார். சரக்குப் போக்குவரத்துச் செலவைக் குறைக்கும் வகையில் நீர்வழிகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

ஹசிரா - கோகா இடையே சாலை வழியாக 370 கிலோமீட்டர் தொலைவுக்குச் செல்ல 12 மணிநேரமும், ரயிலில் 527 கிலோமீட்டர் தொலைவுக்குச் செல்ல 9 மணி நேரமும் ஆகிறது. படகுப் போக்குவரத்து தொடங்குவதால் கடல்வழியே செல்வதற்கு 4 மணி நேரமே ஆகும். இரு நகரங்கள் இடையே இயக்கப்படும் வாயேஜ் சிம்பனி படகில் ஒவ்வொன்றும் 50 டன் எடை கொண்ட 30 லாரிகள், 100 கார்கள் ஆகியவற்றுடன் 500 பயணிகளையும் ஏற்றிச் செல்ல முடியும். இதனால் சாலைகளில் வாகன நெரிசல் குறைவதுடன், காற்று மாசுபடுவதும், சாலை விபத்துக்களும் குறையும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments