விண்வெளி ஆய்வில் மற்றொரு மைல்கல்..!
இந்தியாவின் புவி ஆய்வு செயற்கை கோள் உள்ளிட்ட 10 செயற்கைகோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி நிலை நிறுத்தி உள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் செயற்கோள்களை பொருத்தி திட்டமிட்ட இலக்குகளில் நிலை நிறுத்தி வருகிறது.
தற்போது பி.எஸ்.எல்.வி. சி-49 ரக ராக்கெட்டை இஸ்ரோ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ராக்கெட்டில் பூமி கண்காணிப்பு பணிக்காக இந்தியாவுக்கு சொந்தமான இ.ஓ.எஸ். 01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோளும், 9 பன்னாட்டு செயற்கைகோள்களையும் விண்ணுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
இதில் லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த தொழில்நுட்ப கண்டுப்பிடிப்பு செயற்கைகோள், லக்சம்பர்க் நாட்டைச் சேர்ந்த கிளியோஸ் ஸ்பேஸின் 4 கடல்சார் பயன்பாட்டு செயற்கைகோள்கள் மற்றும் அமெரிக்காவின் 4 லெமூர் செயற்கைகோள்களும் அடங்கும். இந்த 10 செயற்கைகோள்கள் அடங்கிய ராக்கெட் ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்ணில் ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து ஏவ ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
26 மணி நேர கவுண்ட்டவுன் முடிந்த நிலையில், பி.எஸ்.எல்.வி. சி-49 ரக ராக்கெட் நேற்று பிற்பகல் 3.02 மணிக்கு புறப்படுவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில், மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக கவுண்ட்டவுன் நேரம் 5 நிமிடங்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டது. ராக்கெட் புறப்படும் நேரம் 3.12 மணியாக மாற்றப்பட்டது. அதன்படி 3.12 மணிக்கு ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது.
புறப்பட்ட சில நிமிடங்களில் எல்லாம் குறிப்பிட்ட இலக்குகளில் 10 செயற்கைகோள்களும் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டதாகவும், அவை வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இந்தியா விண்ணில் செலுத்தி உள்ள புவி ஆய்வு செயற்கைகோள், அனைத்து கால நிலைகளிலும் செயல்படக்கூடியதாகும், விவசாயம், வனம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகியவற்றுக்கு உதவும் வகையில் இந்த செயற்கைகோள் செயல்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.
இந்த செயற்கைக்கோள், எத்தகைய காலநிலையிலும் நில அமைப்புகளை முப்பரிமாணத்தில் துல்லியமாக படம்பிடிக்கும் திறன் பெற்றதாகும். இந்த ஆண்டில் இஸ்ரோ சார்பில் விண்ணில் செலுத்தப்பட்ட முதல் ராக்கெட், செயற்கைக்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments