அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள அதிபர் ஜோ பைடன் குறித்து ஒரு பார்வை
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். யார் இந்த ஜோ பைடன்... என்பது குறித்த ஒரு சிறப்புப் பார்வை.
ஜோசப் ராபினட் பைடன் என்பதன் சுருக்கமாக ஜோ பைடன் என்று அறியப்படும் இவர், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் 1942 ஆம் ஆண்டு கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவர். வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கி அரசியலில் இறங்கிய பைடன், அந்நிய நாடுகளின் மீதான அமெரிக்காவின் ஆதிக்கத்தை கடுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவிற்கு எதிர்த்தார். 1972ம் ஆண்டு தனது 29வது வயதிலேயே செனட் சபைக்கு தேர்வானார்.
செனட்டராக தேர்வு பெற்ற மகிழ்ச்சியை கொண்டாடும் தருணத்தில் பைடனின் மனைவி நெய்லியாவும், மகள் கிறிஸ்டினாவும் சாலை விபத்தில் உயிரிழக்க, நொறுங்கிப் போன அவர், 2 மகன்களின் எதிர்காலம் கருதி அடுத்த 5 ஆண்டுகள் கழித்து ஆசிரியை ஒருவரை மறுமணம் செய்து கொண்டார். பின்னர் முதுகுவலி, கழுத்து வலி, முடக்கு வாதம், மூளையில் அறுவை சிகிச்சை என வலியோடும், வாழ்க்கையோடும் போராடிக் கொண்டிருந்த போதும், அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆறு முறை செனட்டர் ஆக இருந்திருக்கிறார்.
அமெரிக்க அரசியலில் 50 ஆண்டுகளாக இருந்து வரும் பைடன் அரசுப்பதவிகளில் தொடர்ச்சியாக 40 ஆண்டுகால அனுபவத்தை பெற்றவர் ஆவார். மிகக்குறைந்த வயதில் செனட்டராகவும், மிக அதிக வயதில் அதிபராகவும் தேர்வு பெற்ற பெருமையும் பைடனுக்கே கிடைத்துள்ளது. 2008 முதல் 8 ஆண்டுகள் துணை அதிபராக பெறுப்பு வகித்த, பைடன் அந்த காலகட்டத்தில் அதிபராக இருந்த ஒபாமாவின் நம்பிக்கைக்கு உரியவராகவும் விளங்கினார்.
1988 மற்றும் 2008ம் ஆண்டு அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் தோல்வியுற்ற பைடன் தனது 3 வது முயற்சியில் 77 வயதில் தற்போது வெற்றியைப் பெற்றுள்ளார். எளிய தேர்தல் பரப்புரை, மக்களை கவர்ந்திழுக்கும் வசீகர வார்த்தைகள், அனுதாப பார்வையுடன் அடித்தட்டு மக்களை அணுகும் போக்கு பைடனுக்கு அதிபர் தேர்தலில் வெற்றியைத் தேடி தந்துள்ளது.
டிரம்ப்பின் வலதுசாரி, இனவாத, நிறவெறிக் கொள்கை, கொரோனா குறித்த பார்வை, வெறுப்பான பரப்புரைகள் போன்றவை பைடனுக்கு இதுவரை அதிபர் தேர்தலில் எவரும் பெறாத அளவுக்கு அதிக வாக்குகளை பெற்றுத் தந்து வெற்றியை வசமாக்கி உள்ளது.
Comments