அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி யாருக்கு? - 4ஆவது நாளாக இழுபறி
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி யாருக்கு என்பதில் 4ஆவது நாளாக சஸ்பென்ஸ் நீடிக்கும் நிலையில், பென்சில்வேனியா, ஜார்ஜியா, நெவேடா மாநிலங்களில் ஜோ பைடன் முன்னிலையில் உள்ளார். பென்சில்வேனியாவில் உடனடியாக வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க அமெரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் பெரும்பான்மைக்கு 270 இடங்கள் தேவை என்ற நிலையில், 253 இடங்களை ஜோ பைடனும், 214 இடங்களை டிரம்பும் பெற்றுள்ளனர். அரிசோனா மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்துவிட்டதா என்பதில் இருவேறு விதமான தகவல்கள் வெளியாகின்றன. எனவே, அரிசோனா மாநிலத்தின் 11 இடங்களை ஜோ பைடன் கணக்கில் சேர்த்தால் அவர் 264 இடங்களை பெற்றுள்ளார்.
பென்சில்வேனியா, ஜார்ஜியா, நெவேடா மாநிலங்களில் வாக்கு எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த 3 மாநிலங்களிலுமே பைடனே முன்னிலையில் உள்ளார். இதில் 20 இடங்களைக் கொண்ட பென்சில்வேனியாவை கைப்பற்றினாலே, பைடன் அதிபர் ஆவது உறுதியாகி விடும்.
ஜார்ஜியாவைப் பொறுத்தவரையில், மிகக்குறைந்த வாக்கு எண்ணிக்கையிலேயே பைடன் முன்னிலையில் உள்ளார். வாக்கு வித்தியாசம் அரை சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால், அங்கு மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும். இதனிடையே, அதிபர் டிரம்ப் சார்ந்துள்ள குடியரசுக் கட்சியினர், தேர்தல் நாளுக்குப் பிறகு அஞ்சல் மூலம் வந்த வாக்குகளை எண்ண தடை விதிக்குமாறு உச்சநீதிமன்றத்தை அணுகினர்.
இதை விசாரித்த உச்சநீதிமன்றம் வாக்கு எண்ணிக்கைக்கு உடனடியாக தடை விதிக்க மறுத்துவிட்டது. ஆனால் மனு மீதான விசாரணை முழுஅமர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Comments