Dairy Milk சாக்லெட்டில் பீடி துண்டு ? உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை
திண்டுக்கலில் குழந்தைக்கு வாங்கிய டெய்ரி மில்க் சாக்லெட்டில் புகைத்து பாதியுடன் அணைக்கப்பட்ட பீடி துண்டு இருப்பதாக அளிக்கப்பட்ட புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் மிகவும் சுவைத்து உண்ணும் டெய்ரி மில்க் சாக்லெட்டில், புகைப் பொருளான பீடி துண்டு இருந்ததாக எழுந்த புகார் குறித்து உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திண்டுக்கல் ஆரோக்கிய மாதா தெருவை சேர்ந்த கமலக்கண்ணன் என்பவர், தனது நண்பரை பேருந்தில் வழியனுப்பி வைப்பதற்காக திண்டுக்கல் பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளார்.
அப்போது, கமலக்கண்ணனின் உறவினர் ஒருவர் குழந்தையுடன் வரவே, அங்குள்ள SVR என்ற டீக்கடையில் குழந்தைக்கு ஸ்னாக்ஸ் வாங்கிய கமலகண்ணன், 10 ரூபாய் டெய்ரி மில்க் சாக்லேட் ஒன்றையும் வாங்கியுள்ளார்.
சாக்லேட் கவரை பிரித்து குழந்தைக்கு தான் கொடுத்த போது, அதில் புகைத்து பாதியுடன் அணைக்கப்பட்ட பீடி துண்டு ஒன்று சாக்லேட்டுடன் ஒட்டியிருந்ததாக கமலக்கண்ணன் கூறியுள்ளார்.
இது குறித்து அந்த டீக்கடை ஊழியரிடம் கமலக்கண்ணன் கேட்ட போது, சாக்லேட்டில் பீடி துண்டு இருந்தது பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்றும், வேண்டுமென்றால் அந்த சாக்லேட்டுக்கு பதிலாக வேறொரு சாக்லேட்டை தருவதாக கூறியுள்ளார்.
அதற்கு ஒத்துக்கொள்ளாத கமலக்கண்ணன், உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு செல்போனில் புகாரளிக்கவே, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள், பீடி துண்டு இருந்ததாக கூறப்படும் சாக்லேட் உட்பட அந்த கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அனைத்து டெய்ரி மில்க் சாக்லேட்டுகளையும் பறிமுதல் செய்து, பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விவகாரம் குறித்து, டீக்கடை உரிமையாளர், டெய்ரி மில்க் சாக்லேட் ஹோல் சேல் டீலர் ஜி.எம். மார்க்கெட்டிங் நிறுவனம், டெய்ரி மில்க் நிறுவனத்தின் திண்டுக்கல் மாவட்ட பிரதிநிதி ஆகியோரிடம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், டீக்கடை உரிமையாளர் மற்றும் மொத்த டெய்ரி மில்க் விற்பனையாளர்களுக்கு விளக்கம் கேட்டு தனித்தனியே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கவரில் அடைத்து விற்கப்படும் எந்த ஒரு உணவுப் பொருளையும் நாம் கவனத்துடன் உட்கொள்ள வேண்டும் என்பது இந்த சம்பவத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
Comments