அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி முகம்
அமெரிக்காவின் பென்சில்வேனியா, ஜார்ஜியா ஆகிய மாகாணங்களிலும் ஜோ பைடன் முன்னிலை பெற்றுள்ளதால் அவருக்கு வெற்றி வாய்ப்பு உறுதியாகி உள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடர்பாக சட்ட ரீதியான போராட்டத்தை தொடங்கியுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்து, 4 நாட்கள் ஆன போதிலும் முடிவு அறிவிக்கப்படாமல் இழுபறி நீடிக்கிறது. 538 பிரதிநிதிகளைக் கொண்ட எலக்டோரல் காலேஜ் எனப்படும் தேர்வாளர்கள் சபையில், பெரும்பான்மைக்கு 270 இடங்களைப் பெற வேண்டும். ஏற்கனவே 264 இடங்களை கைப்பற்றி இருக்கும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கு, இன்னும் 6 இடங்களே தேவைப்படுகிறது.
பென்சில்வேனியா, ஜார்ஜியா, நெவேடா, அரிசோனா, வட கரோலினா ஆகிய 5 மாநிலங்களில் இன்னும் வாக்கு எண்ணிக்கை முடிவடையாமல் நீடித்து வருகிறது. ஜார்ஜியாவில் டிரம்ப்- பைடன் இடையே வாக்கு வித்தியாசம் குறைவாக உள்ளதால் மறு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
கடைசியாக கிடைத்த தகவல்களின்படி பென்சில்வேனியா, ஜார்ஜியா, நேவடா ஆகிய மாகாணங்களிலும் பைடன் முன்னிலை பெற்றுள்ளார். இதனால் அவரது வெற்றி வாய்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
அதே சமயம் 214 இடங்களுடன் அதிபர் டிரம்ப் பின்தங்கி இருக்கிறார். வடக்கு கரோலினா, அலாஸ்கா ஆகிய மாகாணங்களில் அவர் முன்னிலையில் உள்ளார். இருப்பினும், பெரும்பான்மைக்கு தேவையான 270 இடங்களைப் பெற டிரம்ப்புக்கு வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
இதனிடையே, வாக்கு எண்ணிக்கை தொடர்பாக சட்டரீதியான போரைத் தொடங்கி விட்டதாக டிரம்ப் டிவிட்டர் மூலமாக தெரிவித்துள்ளார். ஜார்ஜியா, மிச்சிகன் நீதிமன்றங்கள் டிரம்ப்பின் மறுவாக்கு எண்ணிக்கை கோரிக்கையை நிராகரித்துவிட்டன.
சட்டப்பூர்வமான வாக்குகளை மட்டும் கணக்கிட்டால் தமது வெற்றி உறுதி என்று தெரிவித்துள்ள டிரம்ப், மறுவாக்கு எண்ணிக்கை கோரி உச்சநீதிமன்றத்தை அணுக உள்ளதாக அறிவித்துள்ளார்.
ஜோ பைடன் தவறுதலாக கூட அதிபராகும் உரிமையைக் கோரக்கூடாது என்று எச்சரித்துள்ள டிரம்ப் தம்மாலும் அவ்வாறு கோர முடியும் என்று தெரிவித்துள்ளார். சட்டரீதியான போராட்டம் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ள டிரம்ப் தமது வெற்றி களவாடப்பட்டு விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதனிடையே டிரம்ப் மேற்கொண்டு வரும் சட்ட நடவடிக்கைகளின் செலவுக்காக, குடியரசு கட்சியினர் 60 மில்லியன் டாலர்கள் நிதி திரட்ட முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments