அமெரிக்க அதிபர் தேர்தல் : வாக்கு எண்ணிக்கையை தடுத்து நிறுத்தும் அதிபர் டிரம்ப் தரப்பின் முயற்சிக்கு பின்னடைவு

0 3684
அமெரிக்க அதிபர் தேர்தல் : வாக்கு எண்ணிக்கையை தடுத்து நிறுத்தும் அதிபர் டிரம்ப் தரப்பின் முயற்சிக்கு பின்னடைவு

அமெரிக்க அதிபர் தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 270 இடங்களை ஜோ பைடன் நெருங்கி வரும் நிலையில், 3 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையை தடுத்து நிறுத்தும் அதிபர் டிரம்ப் தரப்பின் முயற்சிகளுக்கு நீதிமன்றங்களில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

உலகமே ஆவலோடு உற்று நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் மூன்றாவது நாளாக இழுபறி நீடிக்கிறது.

ஜோ பைடன், டிரம்ப் பெற்றுள்ள இடங்கள் குறித்து அமெரிக்காவின் முன்னணி ஊடகங்களே இருவேறு விதமான எண்ணிக்கைகளை தெரிவிக்கின்றன.

அரிசோனா மாநிலத்தில் ஜோ பைடன் வெற்றிபெற்றுவிட்டதாக சில ஊடகங்களும், முன்னணியில் இருப்பதாக சில ஊடகங்களும் குறிப்பிடுகின்றன.

அரிசோனா மாநிலத்தின் 11 பிரதிநிதிகளை ஜோ பைடன் கணக்கில் சேர்த்தால், அவர் 264 இடங்களுடன் முன்னணியில் உள்ளார். அந்த 11 இடங்களை சேர்க்கவில்லை எனில், ஜோ பைடன் 253 இடங்களுடன் முன்னணியில் உள்ளார்.

538 பிரதிநிதிகளைக் கொண்ட எலக்டோரல் காலேஜ் எனப்படும் தேர்வாளர்கள் சபையில், பெரும்பான்மைக்கு 270 இடங்களைப் பெற வேண்டும்.

அந்த வகையில், அரிசோனா, நெவேடா ஆகிய இரு மாநிலங்களிலும் முன்னிலையில் உள்ள பைடன் அங்கு வெற்றி பெற்றால் 270 இடங்களைப் பெற்று விடுவார்.

அதேசமயம் அரிசோனாவில் இன்னும் ஆயிரக் கணக்கான வாக்குகள் எண்ணப்பட வேண்டியுள்ளன. வாக்குகள் மேலும் மேலும் எண்ணப்படும்போது ஜோ பைடன்-டிரம்ப் இடையேயான இடைவெளி மேலும் சுருங்குகிறது.

இதனால் உத்வேகம் பெற்றுள்ள டிரம்ப ஆதரவாளர்கள் அரிசோனாவில் மட்டும் வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு கேட்கவில்லை.

இதேபோல, 20 இடங்களைக் கொண்ட பென்சில்வேனியா மற்றும் 16 இடங்களைக் கொண்ட ஜார்ஜியா ஆகிய இரு மாநிலங்களிலும் டிரம்புக்கும் ஜோ பைடனுக்கும் இடைவெளி குறுகி வருகிறது.

இதில், ஏதாவது ஒரு மாநிலத்தை ஜோ பைடன் கைப்பற்றினால், பெரும்பான்மையை நோக்கி டிரம்ப் செல்வதற்கான பாதை அடைபட்டு விடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வாக்கு எண்ணிக்கை முடிவுறாத இந்த 5 மாநிலங்களில் மந்த கதியில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

கடந்த 3ஆம் தேதியே வாக்குப்பதிவு முடிந்துவிட்டாலும், அன்று அனுப்பப்பட்ட அஞ்சல் வாக்குகள் தாமதமாக வந்து சேரும்போது, அவற்றை எண்ணக் கூடாது என எதிர்ப்புக் கிளம்புவதால், வாக்கு எண்ணிக்கை மந்த கதியில் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, தமது ட்விட்டர் பக்கத்தில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள் என அதிபர் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

இதற்காக உச்சநீதிமன்றம் செல்வதற்கும் டிரம்ப் தரப்பினர் தயாராகி வருகின்றனர். ஏற்கெனவே, ஜார்ஜியா, மிச்சிகன், பென்சில்வேனியா ஆகிய 3 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன், அதிபர் டிரம்ப் தரப்பு சம்மந்தப்பட்ட மாநிலங்களில் நீதிமன்றங்களை அணுகியது.

இதில், ஜார்ஜியா, மிச்சிகனில் அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டு விட்டன. பென்சில்வேனியாவிலும் நீதிமன்றம் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த மறுத்துவிட்டது. அதேசமயம், வாக்கு எண்ணிக்கையை அருகில் இருந்து கண்காணிக்க டிரம்ப் தரப்பு அனுமதியைப் பெற்றுள்ளது.

வாக்கு எண்ணிக்கை முடிவடையாத மாநிலங்களில், பென்சில்வேனியாவில் வென்றாலோ அல்லது ஜார்ஜியா, நெவேடா, அரிசோனா ஆகிய மூன்றில் ஏதாவது இரண்டில் வென்றாலோ ஜோ பைடன்தான் அமெரிக்காவின் அடுத்த அதிபர் என்பதால் இந்த 4 மாநிலங்கள் மீதே அனைவரது கவனமும் உள்ளது.

இந்நிலையில், 16 இடங்களை தீர்மானிக்கும் ஜார்ஜியாவில், டிரம்பைவிட பின்தங்கியிருந்த பைடன், தற்போது அவரை முந்தியுள்ளார். இதேபோல நெவேடாவிலும் பைடன் முன்னிலையில் உள்ளார்.

இந்த இரு மாநிலங்களிலும் இருவருக்குமான வித்தியாசம் ஆயிரம் என்ற அளவிலேயே உள்ளதால் யாருக்கு வெற்றி என்பதில் பரபரப்பு நீடிக்கிறது. அதேசமயம் பென்சில்வேனியாவில் அதிபர் டிரம்ப் சுமார் 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments