சிதம்பரம் : போதையில் துள்ளல்; தெளிந்ததும் கெஞ்சல்!- போலீஸ் கவனிப்பால் கதறல்!
சிதம்பரத்தில் போதையில் போலீஸ்காரர்களிடம் தகராறில் ஈடுபட்டவர், காலையில் போதை தெளிந்ததும் கை கூப்பி மன்னிப்பு கேட்டும் பலனளிக்காமல் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிதம்பரம் தாயுமானவர் நகரைச் சேர்ந்தவர் வினோத் (வயது 35). இவர் குடிபோதையில் வேணுகோபால் பிள்ளை தெருவில் ரகளையில் ஈடுபட்டார். போலீசார் பிடித்து விசாரணை செய்தபோது , பிரபல பத்திரிக்கையில் நிருபராக பணியாற்றி வருவதாகக் கூறி , போலீசாருடனும் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, போலீஸார் அவரின் இரு சக்கர வாகனத்தைக் கைப்பற்றினர். அப்போது, போலீஸ்காரர்களிடம் தகாத வார்த்தைகளைப் பேசி வாக்குவாதம் செய்தார். போலீஸ்காரர் மரியாதையாக பேசுமாறு அறிவுறுத்தியும் மது போதையில் இருந்த வினோத்தின் காதில் ஏறவில்லை.
வினோத்துடன் இருந்த நண்பர் நிலைமை விபரீதமாவதை அறிந்து சமாதானப்படுத்தியும் பலன் இல்லை. ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சக்கட்டத்துக்கு சென்ற போலீஸார் வினோத்தை கொத்தாக அள்ளி போலீஸ் நிலையம் சென்று கவனித்தனர். இதையடுத்து, போதை தெளிந்த வினோத் கையெடுத்து கும்பிட்டு தன்னை விட்டு விடுமாறும், போதையில் தகாத வார்த்தைகளை பேசி விட்டதாகவும் மன்னிப்பு கேட்டு கதறினார். ஆனால், எந்த பலனுமில்லை. விசாரணையில் அவர் போலி நிருபர் என்பதும் தெரிய வந்தது. தற்போது, வினோத் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்...
Comments