4 இன்ஜீன்கள்; 3.40 லட்சம் லிட்டர் பெட்ரோல் ; 50 யானைகளை ஏற்றலாம்! சென்னையில் பறக்கும் திமிங்கலம் அன்டனோவ்

0 31491

சென்னை விமான நிலையத்துக்கு 96 டன் எடை சரக்குடன் வந்திறங்கியுள்ள பறக்கும் திமிங்கலம் என்ற செல்லப் பெயர் கொண்ட உலகின் இரண்டாவது மிகப் பெரிய சரக்கு விமானமான அன்டனோவ் ஏஎன்- 124 விமானத்தில் 50 யானைகளை ஏற்றிச் செல்ல முடியும்.

கடந்த 1982 ம் ஆண்டு முதல் உக்ரைன் நாட்டின் அன்டனோவ் நிறுவனம் இத்தகைய பிரம்மாண்ட விமானங்களைத் தயாரிக்கத் தொடங்கியது. 2004 ம் ஆண்டுக்குப் பிறகு, இந்த விமானங்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டாலும் இப்போதும் 24 விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. ராணுவத் தளவாடங்களை ஏற்றிச் செல்லும் வகையில் இந்த ரக விமானங்கள் தயாரிக்கப்பட்டன. இதனால், அன்டனோவ் விமானத்தின் காக்பிட் மாடியில் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த சரக்கு விமானப் போக்குவரத்து நிறுவனமான Volga-Dnepr Airlines இந்த ரக விமானங்களை இயக்கி வருகிறது.

அன்டனோவ் 124 ரக விமானம் 226 அடி நீளமும், 68.2 அடி உயரமும், 240 அடி இறக்கை அகலமும் கொண்டது. விமானத்தில் டி-18 - டி டர்போஃபேன் இன்ஜீன்கள் நான்கு பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு இன்ஜீனும் 229.5 kN த்ரஸ்ட் சக்தியை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 3.40 லட்சம் லிட்டர் எரி பொருள் பிடிக்கக் கூடிய எரிபொருள் டேங்க் இந்த விமானத்தில் உள்ளது. ஒரு முறை பெட்ரோல் நிரப்பினால் 5,200 கிலோ மீட்டருக்கு மேலாகத் தரையிறங்காமல் பறக்கும் திறன் கொண்டது. மணிக்கு 850 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் அன்டனோவ் விமானத்தில் 150 டன் சரக்குகளை ஏற்றிச் செல்ல முடியும். இது கிட்டத்தட்ட 50 யானைகளின் எடைகளுக்குச் சமமாகும்.

விமானத்தின் கேப்டன் தலைமையில் துணை விமானிகள், வழிகாட்டும் இன்ஜீனியர்கள், ரேடியோமேன் என 6 பேர் கொண்ட குழுவால் அன்டனோவ் ரக விமானம் இயக்கப்படுகிறது. அன்டனோவ் 124 விமானத்துக்கு ஒரு அண்ணனும் இருக்கிறான் . அந்த ராட்சதனின் பெயர் Antonov An-225 என்பதாகும். இந்த விமானம்தான் உலகின் மிகப் பெரிய சரக்கு விமானம் என்ற பெருமையைக் கொண்டது. 6 இன்ஜீன்களை கொண்ட Antonov An-225 ரக விமானம் 1988 - ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. தற்போதும், இந்த விமானம் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments