தடையை மீறி வேல் யாத்திரை, பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் கைது..!
தடையை மீறி வேல் யாத்திரையை முன்னெடுப்பதற்காக, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில், ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர் சென்னையில் இருந்து திருத்தணி புறப்பட்டுச் சென்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து பா.ஜ.க. சார்பில் இன்று வெற்றிவேல் யாத்திரை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த யாத்திரை முருகப் பெருமானின் அறுபடை வீடுகள் உள்ள நகரங்கள் வழியாக செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பாஜகவின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை.
இருப்பினும் தடையை மீறி யாத்திரை செல்ல உள்ளதாக தெரிவித்த தமிழக பாஜக தலைவர், யாத்திரைக்கு கடவுள் முருகன் அனுமதி வழங்கியுள்ளதாகக் கூறினார். சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தில் பின்னணியில் இருப்பது மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
பின்னர் சென்னை கோயம்பேட்டில் இருந்து பிரச்சார வேனில் எல்.முருகன், பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் திருத்தணி புறப்பட்டுச் சென்றனர். கோயம்பேடு பகுதியில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்ததால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையில், பாஜகவினர் வாகனங்களை தடுத்து நிறுத்திய போலீசார், எல்.முருகன் வாகனம் மட்டும் செல்ல அனுமதித்தனர். சுமார் 300 போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு நிலவியது.
இந்த நிலையில் தடையை மீறி வேல் யாத்திரையை தொடங்கிய பாஜக மாநில தலைவர் முருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். காவல் வாகனங்களில் ஏற்றி அழைத்து செல்லப்பட்ட பாஜகவினர், அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Comments