பள்ளி பக்கம் ஒதுங்கியதில்லை... தேனீ வளர்ப்பில் பலவிருதுகள்! மஞ்சுளாவின் 'மஞ்சேரி' பிராண்ட் உருவானது எப்படி?

0 6464

ள்ளி பக்கமே எட்டிப்பார்க்காத கோபிசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தேனி வளர்ப்பில் தேசிய விருது பெற்று சாதனை படைத்துள்ளார்.

தேன், உடல் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாதது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் தேனை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். பல நோய்களுக்கு தீர்வு காணவும், உடலுக்கு ஊட்டச்சத்துக்களையும் தேன் அள்ளிக் கொடுக்கிறது. தேனின் மருத்துவ மகத்துவத்தைப் புரிந்து கொண்டு தேனி வளர்ப்பில் ஈடுபட்ட மஞ்சுளா என்ற பெண் இன்று மிகச்சிறந்த தொழிலதிபராக மாறியுள்ளர்.

கோபிச்செட்டிப்பாளையம் அருகேயுள்ள கொளப்பலூரைச் சேர்ந்த மஞ்சுளா பள்ளி பக்கமே எட்டிப்பார்க்காதவர். கடந்த 13 ஆண்டுகளாக தேனி வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். தேன் தயாரிப்பில் மதிப்பு கூட்டு பொருள் தொழில்நுட்பத்தில் ஈடுபட்டு, இன்று சாதனைப் பெண்ணாகவும் மாறியுள்ளார். மஞ்சுளாவுக்கு அவரின் கணவர் பார்த்திபனும் பக்கப்பலமாக இருக்க, தேன் மற்றும் தேன் சார்ந்த பொருள்களுக்காக மஞ்சேரி என்ற பெயரில் புது பிராண்டையே மஞ்சுளா உருவாக்கியுள்ளார்.

இந்த பிராண்டின் கீழ் வேம்பு தேன், வங்கு தேன், முருங்கை தேன், பூண்டு தேன், நெல்லி தேன் , பன்னீர்ரோஸ் தேன் என பல வகைகளில் தேன் தயாரிக்கப்படுகிறது. அதோடு, தேன் அல்வா, தேன் கேக் , தேன் திணை பிஸ்கட் , தேன் ஜெல்லி , தேன் ஜஸ்க்ரீம் , தேன் கிரேப் ஜூஸ், தேன் ஜாம், தேன் லாலி பாப் போன்ற 32 வகையான தேன் சார்ந்த மதிப்பு கூட்டு பொருள்களும் உற்பத்தி செய்யப்படுகிறது. மஞ்சுளாவின் கண்டுபிடிப்பில் மிக முக்கியமானது தேன் கேக் ஆகும். கோதுமை மாவில் வெண்ணெய், தேன், பாதாம், முந்திரி போன்ற உலர் பழங்களை பயன்படுத்தி மட்டுமே தேன் கேக்கை தயாரிக்கிறார். குழந்தைகளுக்காக தேன் பிஸ்கெட்டும் தயாரித்து விற்பனை செய்கிறார்.தேன் கேக் மற்றும் தேன் பிஸ்கட்டுகளுக்கு மக்களிடத்தில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.image

இது குறித்து மஞ்சுளா கூறுகையில், ”முறையான பேக்கிங் செய்து பொருள்களை பாதுகாப்பான முறையில் விற்பனை செய்வதால் மக்களிடம் நம்பிக்கையைப் பெற்றுள்ளோம். தேன் பொருள்களைச் சர்க்கரை நோயாளிகள் கூட உண்ணலாம். ஏனெனில், தேன் சேர்க்கப்படுவதால் அனைத்திலும் சுக்ரோஸின் அளவு மிகக் குறைவாகவே இருப்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இதனால், இன்சுலின் அளவு கட்டுக்குள் இருக்கும். சுற்றுவட்டார விவசாயிகளுக்கு, தேனீ வளர்ப்பு குறித்து பயிற்சி அளித்து, தொழில் தொடங்க ஏற்பாடு செய்தும் கொடுக்கிறோம். தேனீ வளர்க்க விரும்புபவர்கள் ரூ. 5 ஆயிரம் ரூபாய் செலவு செய்து தேனீ பெட்டிகளை வாங்கி மரங்களின் நிழலில் பொருத்தி வைக்க வேண்டும். 15 நாள் களுக்கு ஒருமுறை மட்டுமே பராமரிப்பு செய்தால் போதுமானது. அப்படி செய்து வந்தால் ஆண்டுக்கு ஒரு பெட்டியிலிருந்து 12 கிலோ வரை தேன் கிடைக்கும். தேன் பல ஆண்டுகளுக்கு கெடாது. தேனை உணவுடன் சேர்த்துக்கொள்வதை வழக்கமாக்கிக்கொண்டால் பல நோய்களில் இருந்து விடுபடலாம்.

தேனீக்கள் பெரும்பாலும் கடிக்காது. தேனீக்களின் இனப்பெருக்கத்திற்குத் தடையாக இருந்தாலோ அவற்றுக்குச் சாதகமான வெப்பநிலை மாறினால் மட்டுமே கடிக்கக்கூடிய சூழல் உருவாகும். நாம் பொறுமையாக கையாளும் வரை எந்த பிரச்சனையும் இல்லை. தேனீக்கள் கடித்தால் அந்த இடத்தில் பச்சையிலைச்சாறு பிழிந்தால் குணமாகிவிடும். மலைத்தேனீ அல்லது காட்டுத் தேனீக்கள் கடித்தால் உடனடியாக மருத்துவமனை சென்று தடுப்புசி போட்டுக்கொள்ள வேண்டும்” என்றார்image

பொதுவாக , விவசாய நிலங்களில் தேனீக்களை வளரப்பதால் அதிக மகசூல் கிடைக்கும். அங்கு விளையும் பழங்கள், காய்கறிகள் அதிக ஊட்டச்சத்து நிறைந்தவையாக இருக்கும் .தேன் எந்த பொருளுடன் சேர்க்கப்படுகிறதோ, அதன் தன்மையை அப்படியே ஏற்கும் தன்மை கொண்டது. எனவே, காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீரில், எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து பருகுவது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

தேனீக்கள் வளர்ப்பு மற்றும் தேன் பொருள்கள் தயாரிப்புக்காக நியுட்ரீஸன் அண்டு நேச்சுரல் ஹெல்த் சயின்ஸ் அமைப்பு மஞ்சுளாவுக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளது. மத்திய அரசின் தேனி வளர்ப்பு வாரியத்தில் உறுப்பினராகவுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஒரே பெண்ணும் இவர்தான். தற்போது, மஞ்சுளாவின் மகன் ஜவஹர் ராஜாவும் தேன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளார். தேன் அடைகளிலிருத்து மெழுகு தயாரிப்பதில் ஜவஹர் ராஜா விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments