அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிமுகம்... நீதிமன்றத்தை நாடும் டிரம்ப் தரப்பு

0 2438
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிமுகம்... நீதிமன்றத்தை நாடும் டிரம்ப் தரப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் மிச்சிகன் மற்றும் விஸ்கான்சின் ஆகிய மாநிலங்களிலும் வென்ற நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான 270 இடங்களை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக, அதிபர் ட்ரம்ப் தரப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளது.

அமெரிக்க அதிபர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் விவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் அதிபர் ட்ரம்புக்கும், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், ஜோ பைடன் பெரும்பான்மைக்கு தேவையான 270 இடங்களை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, நியூ மெக்சிகோ, நியூயார்க், மாசாசூசெட்ஸ், கொலராடோ போன்ற பகுதிகளில் ஜோ பைடன் வென்றிருந்த நிலையில், கடும் போட்டியுடன் இழுபறி நீடித்து வந்த மிச்சிகன் மற்றும் விஸ்கான்சின் மாநிலங்களிலும் வெற்றிபெற்று 264 இடங்களை அவர் கைப்பற்றியுள்ளார்.

வெற்றியைத் தீர்மானிக்கும் வடக்கு கரோலினா, நேவடா, அரிசோனா மற்றும் ஜார்ஜியா மாநிலங்களிலும் சிறிய வாக்குகள் வித்தியாசத்தில் பைடன் முன்னிலை வகித்து வருகிறார்.

26 தேர்வாளர்களைக் கொண்ட மிச்சிகன் மற்றும் விஸ்கான்சின் மாநிலங்களில் பைடன் பெற்றுள்ள வெற்றி, அதிபர் டிரம்புக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதுவரை 214 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ள ட்ரம்ப், 20 தேர்வாளர்களைக் கொண்ட பென்சில்வேனியாவில் சிறிய வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

இதனிடையே, மிச்சிகன் மற்றும் பென்சில்வேனியா மாநிலத்தில் பல பகுதிகளில் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க உரிய அனுமதி வழங்கப்படவில்லை என, ட்ரம்பின் பிரச்சாரக் குழு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. ஜார்ஜியாவில் தபால்வாக்குப்பதிவு செய்வதில், மாநில விதிகள் முறைப்படி பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட மாநிலங்களில் சிறிய அளவிலான வாக்கு வித்தியாசமே இருதரப்புக்கும் இடையே காணப்படுவதால், மறு வாக்கு எண்ணிக்கைக்கு நீதிமன்றம் உத்தரவிடலாம் எனக் கூறப்படுகிறது.

இன்றைய நாளின் முடிவிலேயே வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து, வெற்றியாளர் யார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments