அமெரிக்க அதிபர் தேர்தல் சட்டச் சிக்கல் ஏற்படுமா.?
அமெரிக்க அதிபர் தேர்தலில் சட்ட சிக்கல் ஏற்படும் சூழ்நிலை எழுந்தால், புதிய அதிபரை தேர்ந்தெடுக்க பின்பற்றப்படும் வழிமுறைகள் என்ன என்பதை தற்போது காண்போம்...
கொரோனா நெருக்கடி காரணமாக இந்த தேர்தலில் பொதுமக்கள் அதிகளவில் தபால் வாக்குகள் பதிவிட்டுள்ளனர். இதனால் அடையாள சரிபார்ப்பு விதிகள், தபால் வாக்குகள், கொரோனா காரணமாக வாக்களிக்கும் முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் என பலவிஷயங்கள் தொடர்பாக வழக்குகள் தொடர்வதற்கான சாத்தியக் கூறுகள் உருவாகியுள்ளன.
இந்த சூழலில் மிச்சிகன் மாநிலத்தின் பல பகுதிகளில் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க, உரிய அனுமதி வழங்கவில்லை என ட்ரம்பின் பரப்புரைக் குழு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
அந்த மாநிலத்தில் இருதரப்புக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் மிகக் குறைந்த அளவிலேயே இருப்பதால் இந்த வழக்கு, விசாரணை நீதிமன்றம், மாநில நீதிமன்றம் மட்டுமின்றி, அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் வரை செல்லவும் வாய்ப்புள்ளது. இதில், மறு வாக்கு எண்ணிக்கை நடத்தவும் உத்தரவிடப்படலாம்.
கடந்த 2,000ம் ஆவது ஆண்டு தேர்தலில் புளோரிடா மாநிலத்தில் நடைபெற்ற மறுவாக்குப்பதிவில், ஜனநாயக் கட்சி வேட்பாளர் அல் கோர் வெறும் 537 வாக்குகள் வித்தியாசத்தில் ஜார்ஜ் புஷ் இடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தகக்து.
அதிபர் ட்ரம்பின் தற்போதைய பதவிக்காலம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20ம் தேதி தானகவே நிறைவடைந்து விடும். இதற்கு முன்னதாக சட்ட விதிகளின் படி, தேர்தெடுக்கப்பட்ட தேர்வாளர்கள் டிசம்பர் 14ம் தேதி அன்று, அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்க கூட வேண்டும்.
ஒருவேளை சமநிலை அல்லது சட்ட நடவடிக்கை காரணமாக அடுத்த அதிபர் மற்றும் துணை அதிபரை தேர்வு செய்ய முடியாத சூழல் உருவானால், பிரதிநிதிகள் சபையின் அவைத்தலைவர் அதிபர் பொறுப்புக்கு வரலாம். அவர் அந்த பொறுப்பை ஏற்க முடியவில்லை அல்லது விரும்பவில்லை என்றால், ஆளும் கட்சியின் மூத்த செனட் சபை உறுப்பினர் அதிபர் பதவிக்கு வரலாம். ஆனால், அமெரிக்க வரலாற்றில் இந்த மாதிரியான சூழல் இதுவரை உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments