உணவு சாப்பிட்டதில்லை... தண்ணீர் அருந்தியதில்லை! - அகோரியால் அலறிய ஆண்டிப்பட்டி போலீஸ்

0 16547

ஆண்டிப்பட்டி அருகே சாமியார் ஒருவர் பூமிக்கு அடியில் 9 நாள்கள் தவம் இருக்கப் போவதாக கூறி, 12 அடி ஆழக் குழிக்குள் இறங்கி அமர்ந்து பூஜை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகேயுள்ள மொட்டனூத்து கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்- ஜெயலட்சுமி தம்பதியின் மூன்றாவது மகன் சொக்கநாதர். இவர்,  தனது 13-வது வயதிலேயே ஊரைவிட்டு சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. காசிக்குச் சென்ற சொக்கநாதர் சிவனடியார்களிடம் தீட்சை பெற்று அகோரியாக மாறினார். சமீபத்தில் தனது சொந்த ஊரான மொட்டனூத்து கிராமத்துக்கு சொக்கநாதர் மீண்டும் வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை அங்குள்ள தோட்டம் ஒன்றில், குழியை வெட்டி அதனுள்ளே சிவன் படம் மற்றும் ருத்ராட்ச மாலைகளை அடுக்கிவைத்து, தவம் செய்யப் போவதாகவும், மேல் பகுதியில் சிமெண்ட் சிலாப்புகளை வைத்து மூடி விடும்படியும் சொக்கநாதர் கூறியிருக்கிறார். இதையடுத்து, அவரின் பக்தர்கள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய தொடங்கியுள்ளனர். இந்த தகவல் போலீசாருக்குத் தெரிய வந்து, சம்பவ இடத்திற்குச் சென்று சாமியாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, அகோரி சாமியார் போலீஸாரிடம் கூறியதாவது, ''பல வருடங்களுக்கு முன்பே நான் காசிக்குச் சென்று விட்டேன். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக உணவு சாப்பிட்டதில்லை, தண்ணீர் குடிப்பதில்லை. சிவனடியார்களிடம் தீட்சை பெற்றதால் அகோரி முனிவராக மாறி விட்டேன். எனது பெயர் இப்போது சொக்கநாத அகோர முனிவர் ஆகும். தற்போது, புகை பிடித்தே நான் உயிர் வாழ்கிறேன். 9 நாள்கள் உள்ளேயிருந்தாலும், நான் சாக மாட்டேன். நாட்டில் பல்வேறு கொடிய நோய்கள் தாக்கி மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நான் இந்த பூமி பூஜையில் இறங்கியுள்ளேன். அகோரிகள் கோபப்பட்டால் மனிதர்கள் தாங்க மாட்டார்கள்.9 நாள்களுக்குப் பிறகு தீபாவளிக்கு முதல் நாள் நான் வெளியே வருவேன்'' என்று கூறினார்.

சாமியார் பூஜை செய்த இடத்துக்கு ஏராளமான மக்கள் வரத் தொடங்கியதால், அங்கு பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. இதையடுத்து, போலீசார் சாமியாரிடம் குழிக்குள் இறங்கி பூமிபூஜை செய்யக்கூடாது. அதற்கு அரசு அனுமதி இல்லை. எனவே, குழியை விட்டு வெளியேறி வருமாறு கூறினர். சுமார் 2 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு குழியிலிருந்து சாமியார் வெளியே வந்தார். மீண்டும் சாமியார் குழிக்குள் இறங்கி விடக் கூடாது என்பதற்காக, போலீஸார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments