கறிக்கடை பிரச்னை - நெல்லை பாஜக நிர்வாகியைத் துப்பாக்கியால் சுட்ட முன்னாள் ராணுவ வீரர்!
பாளையங்கோட்டையில் கறிக்கடை மற்றும் கழிவுகள் கொட்டுவதால் ஏற்பட்ட தகராறில் பாஜக நிர்வாகியை முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அடுத்த பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியதுரை (( வயது 32 )). இவர் அப்பகுதியில் தனது தந்தையுடன் இணைந்து கறிக் கடை நடத்தி வருகிறார். மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளராகவும் இருக்கிறார். இவருக்கும் கறிக்கடை அருகில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரருக்கும் இடையே இடம் தொடர்பாக பல்வேறு பிரச்சனை இருந்துவந்துள்ளது. மேலும், பெரியதுரை கறிக் கடை கழிவுகளை ராணுவ வீரரின் வீட்டுக்கு அருகே கொட்டுவது தொடர்பாகவும் பிரச்னை இருந்து வந்தது. தகராறு ஏற்படும்போதெல்லாம், ’துப்பாக்கியைக் காட்டி சுட்டு விடுவேன்’ என்று முன்னாள் ராணுவ வீரர் ஜெபமணி பெரியதுரையை மிரட்டியுள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை பெரியதுரைக்கும் முன்னாள் ராணுவ வீரர் ஜெபமணிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஜெபமணி சிகரெட் பிடித்தபடி பெரியதுரையைத் திட்டியுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்ற, ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ஜெபமணி, விறுவிறுவென்று வீட்டுக்குச் சென்று தனது துப்பாக்கியை எடுத்துவந்தவர் பெரியதுரையை நோக்கி சுட்டுள்ளார். இதில், பெரியதுரையின் கையில் பலத்த காயம் ஏற்பட்டு வலியால் அலறித் துடித்தார். உடனே, பெரியதுரை பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்துவந்த பெருமாள்புரம் போலீஸார் முன்னாள் ராணுவ வீரர் ஜெபமணியைக் கைது செய்ததோடு, அவரது துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கக் கோரி பாஜகவினர் பெருமாள் புரம் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Comments